
டேராடூன்,
உத்தரகாண்ட் மாநிலம் சமோலி மாவட்டத்தில் சுமார் 6,995 மீட்டர் உயரத்தில் உள்ள சவுகாம்பா-3 மலை சிகரத்தில் ஏறும் முயற்சியில் அமெரிக்காவைச் சேர்ந்த மிச்சேல் தெரசா மற்றும் இங்கிலாந்தைச் சேர்ந்த பேவ் ஜேன் ஆகிய 2 மலையேற்ற வீராங்கனைகள் ஈடுபட்டிருந்தனர். அவர்கள் இந்திய மலையேறும் அறக்கட்டளையின் சார்பில் நடைபெறும் வெளிநாட்டவருக்கான மலையேற்ற சாகசத்தின் ஒரு பகுதியாக இந்தியாவிற்கு வந்திருந்தனர்.
இந்நிலையில், கடந்த 3-ந்தேதி, 2 மலையேற்ற வீராங்கனைகளும் சுமார் 6,015 மீட்டர் உயரம் வரை மலையில் ஏறியபோது அவர்கள் கொண்டு சென்ற மலையேற்றத்திற்கு தேவையான தளவாட மற்றும் தொழில்நுட்ப உபகரணங்கள் கீழே விழுந்துவிட்டதாக கூறப்படுகிறது. இதனால் இருவரும் மேற்கொண்டு மலையேற முடியாமலும், கீழே இறங்க முடியாமலும் சிக்கிக் கொண்டனர்.
சுமார் 6 ஆயிரம் மீட்டர் உயரத்தில் 3 நாட்களாக அவர்கள் சிக்கித் தவித்த நிலையில், இந்திய விமானப்படை ஹெலிகாப்டர் உதவியுடன் 2 மலையேற்ற வீராங்கனைகளையும் தேடும் முயற்சி நடைபெற்றது. இதன் பலனாக இன்றைய தினம் இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டுள்ளனர். அவர்களின் உடல்நிலம் சீராக இருப்பதாக மாவட்ட பேரிடர் மீட்பு மையம் தகவல் தெரிவித்துள்ளது.