உத்தர பிரதேசத்தில் ரெயில் தண்டவாளத்தில் இரும்பு கம்பிகளை வீசிச்சென்ற நபர் கைது

3 months ago 23

லக்னோ,

உத்தர பிரதேச மாநிலம் லலித்பூர் மாவட்டதில் டெல்வாரா ரெயில் நிலையம் அருக, கடந்த 3-ந்தேதி இரவு படால் எக்ஸ்பிரஸ் ரெயில் சென்று கொண்டிருந்தது. அந்த ரெயிலின் இன்ஜினுக்கு கீழே தீப்பொறி கிளம்பியதை அங்கிருந்த கேட்மேன் கவனித்து, ரெயில்வே அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்துள்ளார். அதிகாரிகள் இன்ஜின் லோகோ பைலட்டுக்கு தகவல் கொடுத்த நிலையில், உடனடியாக அவர் ரெயிலை நிறுத்தியுள்ளார்.

பின்னர் இன்ஜினை ஆய்வு செய்தபோது, அதில் இரும்பு கம்பிகள் சிக்கியிருந்தது தெரிய வந்தது. சரியான நேரத்தில் ரெயிலை நிறுத்தியதால் பெரும் அசம்பாவிதம் தவிர்க்கப்பட்டது. இந்த சம்பவம் தொடர்பாக டெல்வாரா ரெயில் நிலையத்தின் ஸ்டேஷன் மாஸ்டர் ஜகோரா காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில் போலீசார் விசாரணை நடத்தினர்.

இந்த விசாரணையில், சம்பவம் நடந்த இடத்திற்கு அருகே ரெயில்வே ஊழியர்கள் இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை சேமித்து வைத்திருந்தது தெரியவந்தது. அங்கிருந்த இரும்பு பொருட்களை சத்யம் யாதவ்(32) என்ற நபர் திருடிச் சென்று விற்பனை செய்து வந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

இதைத் தொடர்ந்து சத்யம் யாதவை இன்று கைது செய்த போலீசார், அவரது வீட்டில் இருந்து இரும்பு கம்பிகள் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர். அவரிடம் போலீசார் நடத்திய விசாரணையில், சம்பவத்தன்று இரும்பு கம்பிகளை திருடி கொண்டு வந்தபோது படால் எக்ஸ்பிரஸ் ரெயில் வந்துவிட்டதால், பதற்றத்தில் கம்பிகளை தண்டவாளத்தில் வீசிவிட்டுச் சென்றதாக கூறியுள்ளார். தொடர்ந்து இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Read Entire Article