வேலூர், ஏப்.10: வேலூர் அருகே உதவி பேராசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி ₹4.25 லட்சம் மோசடி செய்த நபர் மீது நடவடிக்கை எடுக்க கோரி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் மனு அளித்தார்.
வேலூர் எஸ்பி அலுவலகத்தில் வாராந்திர பொதுமக்கள் குறைதீர்வு கூட்டம் நேற்று நடந்தது. எஸ்பி மதிவாணன் தலைமை தாங்கினார். ஏடிஎஸ்பி பாஸ்கரன் முன்னிலை வகித்து பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். அதில், வேலூர் கம்மவான்பேட்டையை சேர்ந்த ஒரு பெண் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
‘நான் சென்னையில் உள்ள தனியார் கல்லூரியில் உதவி பேராசிரியர் பணிக்காக விண்ணப்பித்தேன். அந்தப்பணிக்காக சான்றிதழ் சரிபார்ப்பு பணி நடந்தது. தனியார் கல்லூரியில் பணிபுரியும் ஒருவர், என்னை தொடர்பு கொண்டு இந்த பணிக்கு அதிக போட்டி உள்ளது. உங்களுக்கு வேலை வாங்கி தருகிறேன். அதற்காக ரூ.15 லட்சம் தருமாறு கேட்டார். என்னால் அவ்வளவு தொகை கொடுக்க முடியாது என தெரிவித்தேன். தொடர்ந்து ரூ.10 லட்சம் தருவதாக தெரிவித்தேன். நானும் பல தவணைகளாக ரூ.4 லட்சத்து 25 ஆயிரம் கொடுத்தேன். ஆனால் அவர் வேலை வாங்கித்தரவில்லை. அவர் மீது நடவடிக்கை எடுத்து எனது பணத்தை மீட்டு தர வேண்டும்’. இவ்வாறு அதில் கூறியுள்ளார்.
காட்பாடி தாலுகா குப்பிரெட்டிதாங்கலைச் சேர்ந்த குப்புசாமி என்பவர் அளித்துள்ள மனுவில், ‘நான் ராணுவத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றுள்ளேன். கடந்த பிப்ரவரி மாதம் வங்கிக்கு சென்று ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் எடுத்தேன். வீட்டுக்கு செல்லும் வழியில் எனது பணம் திருட்டு போனது. இதுகுறித்து புகார் அளித்தேன். போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இதுநாள் வரை பணத்தை மீட்டு தரவில்லை. எனது பணத்தை மீட்டு தர வேண்டும்’. என்றார்.
காட்பாடி அடுத்த முருகப்பட்டு கிராமத்தை சேர்ந்த தமிழ்அன்பன் என்பவர் கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது: ‘என்னுடன் பிறந்த 4 சகோதரர்களும் சேர்ந்து கடந்த 2016ம் ஆண்டு வேலூரில் உள்ள நபர் ஒருவருக்கு கே.வி.குப்பம் சார்பதிவாளர் அலுவலகத்தில் அடமான பத்திரம் என்று நம்பி கையெழுத்து போட்டோம். பத்திரத்தை நாங்கள் முழுமையாக படிக்கவில்லை. கையெழுத்து பெற்ற நபரிடம் ரூ.4.50 லட்சம் பெற்றுக் கொண்டோம். மாதம் 24 சதவீத வரியை செலுத்தி வந்தோம். கடன் தொகையுடன் அசலும் வட்டியும் சேர்த்து செலுத்தி விட்டோம். எங்களிடம் அடமானம் பெற்ற நபரும் அசல் பத்திரத்தை எங்களிடம் ஒப்படைத்து விட்டார். ஆனால் அடமான பத்திரத்தை ரத்து செய்யாமல் காலம் தாழ்த்தி வருகிறார். அடமான பத்திரத்தை ரத்து செய்ய கூறினால் மேலும் பணத்தைக் கேட்டு கொலை செய்து விடுவதாக மிரட்டுகிறார். எனவே எங்களது அடமான பத்திரத்தை ரத்து செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மனுக்களை பெற்றுக்கொண்ட போலீசார் உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்தனர்.
The post உதவி பேராசிரியர் வேலை ஆசை காட்டி ₹4.25 லட்சம் மோசடி எஸ்பி அலுவலகத்தில் பெண் புகார் வேலூர் அருகே appeared first on Dinakaran.