சென்னை,
தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநாடு விக்கிரவாண்டி வி.சாலையில் நேற்று (அக். 27) நடைபெற்றது. இந்த மாநாட்டிற்கு வந்த விஜய், சுதந்திரப் போராட்ட வீரர்கள், மொழிப்போர் தியாகிகளுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ரிமோட் மூலம் மேடையில் இருந்தே 100 அடிக் கம்பத்தில் கொடியேற்றினார். பின்னர் தொண்டர்களிடையே பேசிய அவர் அரசியல், தங்களின் அரசியல் நிலைப்பாடு, கட்சியின் கொள்கை, கொள்கைத் தலைவர்கள் குறித்து பேசினார். பெண்களை கொள்கைத் தலைவர்களாக கொண்டு இயங்கும் ஒரே கட்சி தவெக தான் எனவும் தெரிவித்தார்.
பேச்சுக்கு நடுவே பல கட்சிகளையும் மறைமுகமாக சாடினார். பிளவுவாத அரசியல், திராவிட மாடல், நீட் எதிர்ப்பு, சாதி வாரி கணக்கெடுப்பு என முதல் மாநாட்டிலேயே அரசியல் பிரச்சினைகள் குறித்து பேசினார். தொடர்ந்து, மக்கள் விரோத ஆட்சியை நடத்தி விட்டு திராவிட மாடல் என ஏமாற்றுகிறார்கள். அவர்கள் பாசிச ஆட்சி என்றால், நீங்கள் பாயச ஆட்சியா?. பெரியார், அண்ணா பெயரை சொல்லி, திராவிட மாடல் என்ற பெயரில் குடும்ப ஆட்சியை நடத்துகிறார்கள். அவர்களும் நம்முடைய கொள்கை எதிரி தான். வீடு, உணவு, வேலை இவை மூன்றுமே அடிப்படை தேவை இதை கொடுக்க முடியாத அரசு, இருந்தாலென்ன? இல்லாவிட்டாலென்ன?" என ஆவேசமாக பேசியிருந்தார்.
இந்நிலையில், திமுக எம்.பி. தமிழச்சி தங்கபாண்டியன் தனது எக்ஸ்தளத்தில் வீடியோவுடன் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த பதிவில், எத்தனை கட்சிகள் வந்தாலும் சரி; அதுகுறித்து கவலையில்லை; ஏனெனில் உதயசூரியன் என்றுமே நட்சத்திரங்களைப் பார்த்து அஞ்சியது கிடையாது; உதயசூரியனுக்கு நட்சத்திரங்களைப் பற்றி கவலையும் கிடையாது என பதிவிட்டுள்ளார்.