புனே: கத்திக் குத்தில் காயமடைந்த நடிகர் சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்ததை பார்க்கையில், அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்ற கேள்வி எழுவதாக அமைச்சர் நிதேஷ் ரானே தெரிவித்துள்ளார். கடந்த ஜனவரி 16ம் தேதி நடிகர் சைப் அலிகானின் வீட்டுக்குள் திருடுவதற்காக நுழைந்த கொள்ளையன், நடிகரை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பியோடினான். இதில் பலத்த காயமடைந்த சைப் அலிகான், 5 நாட்கள் சிகிச்சைக்கு பின் வீடு திரும்பினார். சைப் அலிகானை கத்தியால் குத்திய வங்கதேசத்தைச் சேர்ந்த ஷரீபுல் இஸ்லாம் ஷெஹ்சாத் முகமது ரோஹில்லா அமின் பகிர் என்ற ஆசாமியை போலீசார் கைது செய்தனர். இந்நிலையில் இச்சம்பவம் தொடர்பாக வியாழக்கிழமை புனேவில் நடந்த பாஜ கட்சியின் நிகழ்ச்சியில் அமைச்சர் நித்தேஷ் ரானே பேசினார்.
அவர் கூறியதாவது: சைப் அலிகான் மருத்துவமனையில் இருந்து வெளியே நடந்து வந்த விதத்தைப் பார்த்தால், அவர் உண்மையில் தாக்கப்பட்டாரா அல்லது அவர் நடிக்கிறாரா என்ற கேள்வி எழுகிறது. முன்பெல்லாம் சட்டவிரோதமாக இந்தியாவுக்குள் வரும் வங்கதேசத்தினர் சாலையோரத்தில் இருந்து வந்தனர். ஆனால் இப்போது வீடுகளுக்குள் நுழைகின்றனர். சைப் அலிகான் தாக்கப்பட்ட சம்பவத்தில் அனைவரும் வாய்திறக்கிறார்கள், ஆனால் ஒரு இந்து நடிகர் தாக்கப்பட்ட போது அனைவரும் மவுனம் சாதித்தனர். நடிகர் சுஷாந்த் சிங் மரணத்தின் போது எதிர்க்கட்சித் தலைவர்களான ஜிதேந்திர ஆவாத், சுப்ரியா சுலே ஏன் வாய்திறக்கவில்லை? மக்கள் தங்களை சுற்றி என்ன நடக்கிறது என்பதை புரிந்துக் கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.
* ரூ.15,000 கோடி சொத்துகளை கையகப்படுத்தும் ஒன்றிய அரசு
கடந்த 1947-ல் மத்திய பிரதேசத்தின் போபால் மாகாணத்தின் கடைசி மன்னராக நவாப் ஹமிதுல்லா கான் இருந்தார். அவருக்கு 3 மகள்கள். அதில் மூத்த மகள் அபிதா சுல்தான் 1950ல் பாகிஸ்தான் சென்றுவிட்டார். 2வது மகள் சஜிதா சுல்தான் இந்தியாவிலேயே தங்கிவிட்டார். இவர் நவாப் இப்திகார் அலி கான் பட்டோடியை திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதியின் பேரன்தான் பிரபல இந்தி நடிகர் சைப் அலி கான். ஹமிதுல்லா கான் குடும்பத்துக்கு மத்திய பிரதேசத்தில் ஏராளமான சொத்துகள் உள்ளன. இவற்றின் இப்போதைய மதிப்பு ரூ.15 ஆயிரம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்தநிலையில் பிரிவினைக்குப் பிறகு பாகிஸ்தானில் குடியேறியவர்களின் சொத்துகளை எதிரி சொத்து சட்டத்தின் கீழ் ஒன்றிய அரசு கையகப்படுத்த முடியும். இதை எதிர்த்து இதுவரை சைப் அலிகான் குடும்பம் மனு செய்யவில்லை. இதனால் ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான சொத்துகள் ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டில் செல்லும் என்று தெரிகிறது.
The post உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிகர் சைப் நடிக்கிறாரா? மகாராஷ்டிர அமைச்சர் கேள்வியால் சர்ச்சை appeared first on Dinakaran.