உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது, ஒருநாள் வெல்லும் - ஜானி மாஸ்டர்

2 weeks ago 5

ஐதராபாத்,

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபல நடன இயக்குனராக இருப்பவர் ஜானி மாஸ்டர். தமிழில் அரபிக் குத்து, ரஞ்சிதமே, காவலா, மேகம் கருக்காதா உள்ளிட்ட பாடல்களுக்கு இவர்தான் நடன இயக்குனராவார். சமீபத்தில், தனுஷின் திருச்சிற்றம்பலம் படத்தில் இடம்பெற்ற 'மேகம் கருக்காதா' பாடலுக்காக ஜானி மாஸ்டருக்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டு பின் ரத்து செய்யப்பட்டது.

இந்த சூழலில், நடன கலைஞரான இளம்பெண் ஒருவர், ஜானி மாஸ்டர் மீது ஐதராபாத் போலீசில் புகார் அளித்தார். அதன்படி, ஜானி மாஸ்டர் மீது பாலியல் வன்கொடுமை, கொலை மிரட்டல், காயப்படுத்துதல் உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர்.

இதனையடுத்து, அவரை தனது ஜன சேனா கட்சியில் இருந்து நடிகரும் ஆந்திர மாநில துணை முதல்-மந்திரியுமான பவன் கல்யாண் நீக்கினார். இதன் தொடர்ச்சியாக தெலுங்கானா நடன இயக்குனர் சங்கத்தில் இருந்து ஜானி மாஸ்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.

பாலியல் பலாத்கார குற்றச்சாட்டை எதிர்கொண்ட நடன இயக்குனர் ஜானி மாஸ்டர் மீது, போக்சோ வழக்கும் பாய்ந்தது. இதனைத்தொடர்ந்து, தலைமறைவான ஜானி மாஸ்டரை பெங்களூருவில் கைது செய்த போலீசார், அவரை ஐதராபாத் அழைத்துச் சென்று விசாரணை நடத்தி சிறையில் அடைந்தனர்.

சமீபத்தில் அந்தப் பெண் மைனராக இருக்கும்போதிருந்தே அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக ஜானி மாஸ்டர் ஒப்புக்கொண்டுள்ளதாக தகவல் வெளியாகியிருந்தது. இந்நிலையில், அதெல்லாம் பொய்யென்றும் இது திட்டமிட்ட சதி என ஜானி மாஸ்டர் கூறியதாக தகவல் வெளியாகியுள்ளது.

தன்னை திருமணம் செய்துகொள்ளும்படி பாதிக்கப்பட்ட பெண் மன உளைச்சலை தந்ததாகவும் சினிமாவில் அவப்பெயர் உண்டாக்குவேன் என மிரட்டியதாகவும் ஜானி மாஸ்டர் வாக்குமூலம் அளித்துள்ளார். மேலும், ஜானி மாஸ்டர் இது குறித்து புஷ்பா பட இயக்குநர் சுகுமாரிடம் கூறியிருப்பதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஜாமீன் கேட்டு அவர் அளித்த மனு தள்ளுபடியானது. இதனால், 30 நாள்களுக்கும் மேலாக சிறையிலிருந்தார். ஜானி மாஸ்டரின் மனைவி ஆயிஷா, "காதல் என்ற பெயரில் பணக்காரர்களை மிரட்டி பணம் சம்பாதிக்கும் முயற்சி இது" எனக் கூறியிருந்தார். ஜாமீன் கேட்டு விண்ணப்பித்திருந்த ஜானி மாஸ்டரின் விண்ணப்பம் ஒத்திவைக்கப்பட்டு இருந்தது.

இந்த நிலையில், ரங்கா ரெட்டி நீதிமன்றம் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கியது. மேலும், ஜாமீனில் வெளியே வரும் ஜானி மாஸ்டர், புகார் அளித்த பெண்ணிற்கு எந்தத் தொந்தரவோ, அழுத்தத்தையோ தரக்கூடாது என நீதிமன்றம் நிபந்தனை அளித்துள்ளது.

சிறையிலிருந்து வெளியே வந்த ஜானி மாஸ்டர் தன் வீட்டிற்கு சென்று தன் குழந்தைகளைக் கொஞ்சும் வீடியோவை வெளியிட்டு, "இந்த 37 நாள்களில் எங்களிடமிருந்து நிறைய பறிக்கப்பட்டது. என் குடும்பத்தினர் மற்றும் நலன் விரும்பிகளின் பிராத்தனையால் இன்று இங்கிருக்கிறேன். உண்மை பல நேரங்களில் மறைந்தாலும் அழியாது. ஒருநாள் வெல்லும். என் குடும்பத்தினர் கடந்து வந்த இந்த காலகட்டம் என்றென்றும் என் இதயத்தை துளைக்கும்" எனப் பதிவிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

A lot is taken away from us in these 37 days My family & well wishers' prayers got me here today. Truth is often eclipsed but never extinguished, it will prevail one day. This phase of life which my entire family had gone through, will pierce my heart forever pic.twitter.com/kJFgi4zad2

— Jani Master (@AlwaysJani) October 26, 2024
Read Entire Article