உணவை சுட்டு சாப்பிடுவதுதான் நம் ஆதி கால வாழ்க்கை முறை!

1 month ago 10

‘வந்தாச்சு புரட்டாசி பல வீடுகளில் அசைவ உணவுகளுக்கு பை பை சொல்லிவிட்டு சைவ உணவுகளை ஒரு மாதத்திற்கு சாப்பிடுவார்கள். ஆனால் பிறப்பாலயே சைவம் சாப்பிடும் மக்களுக்கு பிரச்சனை இல்லை. இடையில் இப்படியான விரதங்களுக்காக அசைவம் தவிர்க்கும் மக்களுக்கு தான் நிறைய சங்கடங்கள் வந்து சேரும். உடல் அளவிலும், மனதளவிலும் அசைவம் இல்லாமல் வெறும் காய்கறிகளை திடீரென உண்ணும் பொழுது எனர்ஜி இழப்பு அதிகரிக்கும். அதனால்தான் எப்போதுமான கூட்டு பொரியல், குழம்பு வகைகளுடன் பார்பிக்யூ வகைகள் ஆன உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்வதுதான் உடலுக்கு ஆரோக்கியம் என்கிறார் உணவுத் தொழிலில் பல வருடங்களாக அனுபவம் வாய்ந்த அக்‌ஷயா முரளி.

‘ சைவமோ, அசைவமோ, எண்ணெய், தண்ணீர் என எதுவும் இல்லாமல் ஒரு சில மசாலா பொருட்களை மட்டும் சேர்த்துக் கொண்டு சுட்டு சாப்பிடும் பொழுது தான் அதன் ஊட்டச்சத்து முழுவதும் உடலில் சேரும். எந்த காய்கறிகளையும் அல்லது அசைவ உணவுகளையும் முதலில் வேகவைத்து பின்னர் எண்ணெயில் பொரித்து அல்லது வதக்கி சாப்பிடும் பொழுது ஊட்டச்சத்துக்கள் நீரில் கொஞ்சம் கரையும் பிறகு எண்ணெயில் வதக்கி அல்லது பொறித்து எடுக்கும் தருவாயில் இன்னும் கொஞ்சம் ஊட்டச்சத்துக்கள் கரைவது என இப்போது நாம் சமைக்கும் முறை அனைத்தும் அரைகுறை ஊட்டச்சத்துக்களை தான் கொடுக்கின்றன. அதனால்தான் பச்சையாக காய்கறி களையும், மாமிசத்தையும் சாப்பிடும் விலங்குகள் நம்மை விட எலும்பு, தோல், பற்கள் என வலிமையாகவும் உறுதியாகவும் செயல்படுகின்றன. சமைத்து சாப்பிடும் நமக்குத் தான் அதிகமான மருத்துவ செலவுகளும், சிகிச்சை முறைகளும் நாளுக்கு நாள் அதிகரித்துக் கொண்டே செல்கின்றன. சுட்டு சாப்பிடும் பொழுது எவ்வித ஊட்டச்சத்து இழப்பும் உணவுப் பொருட்களில் நடப்பதில்லை. மேலும் எந்த பொருளையும் தீயில் நேரடியாக சுடும் பொழுது அதில் உள்ள நச்சுத்தன்மைகள் நேரடியாகவே அழிந்து விடும். எனவே தான் டயட் விரும்பிகள் பார்பிக்யூ உணவுகளை அதிகம் சாப்பிடுகிறார்கள். இதனால்தான் கிரில் சிக்கன் மற்றும் பார்பிக்யூ சிக்கன் வெரைட்டிகள் பெரிய அளவில் விற்பனையில் முதலிடம் பிடித்திருக்கின்றன’ புரட்டாசி துவங்கி விட்டது காய்கறிகளின் மூலம் உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துக்களை பெறுவது எப்படி? தொடர்ந்தால் அக்‌ஷயா முரளி.

‘எப்போதுமான சாம்பார், குழம்பு வகைகள், பொரியல், கூட்டு, இப்படி இல்லாமல் ஒரு மாற்றத்திற்கு இந்த பார்பிக்யூ வெஜிடபிள் வகைகளை வீட்டிலேயே செய்து சாப்பிடலாம். மாமிசம் இல்லாத சூழலில் உடலில் இழக்கப்படும் சக்திகள் சுட்டு சாப்பிடப்படும் காய்கறிகளின் மூலம் கொஞ்சம் அதிகமாக கிடைக்கும். வருடத்திற்கு ஒருமுறை அல்லது திடீரென சைவமாக மாறுபவர்கள் இந்த எனர்ஜி இழப்பு பிரச்னையை அதிகம் சந்திப்பார்கள். அதே போல் விருப்பப்பட்டு இறைச்சியை ஒதுக்கும்போது இருக்கும் எனர்ஜி இழப்பை விட வீட்டின் பழக்கத்தால் அல்லது சம்பிரதாயத்தின் கட்டாயத்தின் பேரில் இறைச்சியை ஒதுக்குபவர்கள் அதிகம் எனர்ஜி இழப்பதாகவே மருத்துவ குறியீடுகள் சொல்கின்றன. இவர்களுக்கு சாதாரணமான நாட்களை விட அதிக ஊட்டச்சத்துகளும், குறிப்பாக புரதமும் உடலுக்குத் தேவைப்படும். சாப்பிடாதவர்களையும் சாப்பிட வைக்க இந்த பார்பிக்யூ ஸ்டைல் காய்கறிகள் உதவும். இந்த முறையில் கத்தரி, கிழங்கு வகைகள், காளான், பனீர், பீன்ஸ், கேரட், பீட்ரூட், தக்காளி, வெங்காயம், குடை மிளகாய், வெங்காயத்தாள், சோளம், வெண்டைக்காய், பழங்களில் அன்னாசி, தர்பூசணி, ஆப்பீள், பேரிக்காய், வெள்ளரி, ஏன் தேங்காயை கூட வெல்லத்துடன் நம் கிராமத்து முறையில் சுட்டு சாப்பிடலாம். இதற்கு உங்கள் கேஸ் ஸ்டவ்வே போதுமானது. தேங்காய் உள்ளிட்ட பொருட்களை மட்டும் வெளியில் வைத்து தீ மூட்டி சுட்டு சாப்பிடலாம். ஆதிகாலத்தில் மனிதர்கள் அதிக ஆயுளுடன் வாழ்ந்ததற்குக் காரணமே ஆயில் இல்லா வாழ்க்கை முறைதான். இன்று எதையும் வேக வைத்து அல்லது எண்ணெயில் வதக்கிதான் சாப்பிடுகிறோம். இதுவே கொழுப்பு, இதய நோய் துவங்கி ஏராளமான பிரச்னைகளைக் கொண்டு வரும்’ என்னும் அக்‌ஷயா முரளி பெண்களுக்கு இந்த பார்பிக்யூ கான்செப்ட்டில் அதீத பலன்கள் உள்ளன என்கிறார்.

‘பெண்கள் மாதவிடாய் காலத்தில் காய்கறிகள் மற்றும் ஊட்டச்சத்து உணவுகள் அதிகம் உண்ண வேண்டும் என்பது வழக்கம். அதே போல் ஆண்களை விட பெண்களில்தான் கால்சியம் குறைபாடு அதிகம் காணப்படுவதாகவும் மருத்துவ ஆராய்ச்சிகள் தெரிவிக்கின்றன. பனீர், காளான் உள்ளிட்ட உணவுகளை அதிகம் சாப்பிடுகையில் இந்த கால்சியம் குறைபாடு நீங்கும். இன்னும் சுட்டு சாப்பிடுகையில் நேரடியாக அதன் ஊட்டச்சத்துகள் உடலில் சேரும். மேலும் இதனுடன் முருங்கை கீரை சூப் சேர்த்துக்கொள்ள இரட்டை பயன் பெறலாம். கீரை வகைகளையும் கூட சூப்புகளா, சாறுகளாக சாப்பிடும் போது அது கொடுக்கும் பலன் அதிகம். குழந்தைப் பேறுக்கு பிறகு ஏற்படும் கால்சியம் பற்றாக்குறைக்கும் இந்த சாப்பாட்டு முறை மிகப்பெரிய வரம். காய்களை வெட்டி நேரடியாக தீயில் வாட்டி அதனுடன் ஏதேனும் சைவ மையோனைஸ்கள் அல்லது புதினா சட்னி, தக்காளி சட்னி என வீட்டிலேயே செய்து சாப்பிட கூட்டு, பொரியலாக சாப்பிடுவதைக் காட்டிலும் இந்த முறையில் குழந்தைகளும் கிட்டத்தட்ட ஸ்நாக்ஸ் போல அதிகம் காய்களை சாப்பிடுவார்கள். கூடுமானவரை 30ஐக் கடந்தாலே சாலட், கிரில், சூப் வெரைட்டிகளை அதிகம் சேர்க்கும் போது ஆரோக்கியம் சார்ந்த பிரச்னைகள் எதிர்காலத்தில் வராமல் முன்பே தவிர்க்கலாம். இதனால் இதயம், செரிமான உறுப்புகள், சிறுநீரகம் என அனைத்தும் திறம்பட வேலை செய்யும்.
– ஷாலினி நியூட்டன்

The post உணவை சுட்டு சாப்பிடுவதுதான் நம் ஆதி கால வாழ்க்கை முறை! appeared first on Dinakaran.

Read Entire Article