உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல்

3 months ago 18

 

விருதுநகர், அக்.5: ரசாயனம் கலந்த திரவ உணவுப் பொருட்கள் விற்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். குளிர்பான விற்பனையாளர்கள் கலப்படத்தை தவிர்த்து பழரசம், சர்பத், கரும்பு ஜூஸ், குளிர்பானங்கள், மோர், பதநீர், இளநீர், கம்மங்கூழ் உள்ளிட்ட திரவ உணவுகள், குளிர்பானங்களை உற்பத்தி செய்ய வேண்டும். உணவு பாதுகாப்பு நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டும்.

மக்களுக்கு தீங்கு விளைவிக்கக் கூடிய உணவு பாதுகாப்பு நெறிமுறைகளுக்கு உட்படாத ரசாயனம் கலந்த திரவ உணவுப் பொருட்கள் விற்கப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்கப்படும். அனைத்து உணவு வணிகர்களும் உணவு பாதுகாப்புத் துறையின் உரிமம் அல்லது பதிவுச் சான்றிதழ் பெற வேண்டும். சான்று பெற https://foscos.fssai.gov.in என்ற இணையதளத்தில் விண்ணப்பிக்க வேண்டும். உணவு பாதுகாப்பு உரிமம் அல்லது பதிவுச்சான்றிதழை பெற்ற பின்னரே, உணவு வணிகம் தொடங்க வேண்டும்.

பழரசம், சர்பத், கம்மங்கூழ் போன்ற திரவ ஆகாரங்களைத் தயாரிக்கப் பயன்படும் தண்ணீர் பாதுகாப்பானதாகவும், நன்னீராகவும் இருக்க வேண்டும். மேலும், பயன்படுத்தும் தண்ணீரின் தரத்தை, தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்துறையின் பகுப்பாய்வுக்கூடம் அல்லது என்.ஏ.பில். அங்கீகாரம் பெற்ற தனியார் பகுப்பாய்வுக்கூடங்களில் பகுப்பாய்வு செய்து, அதன் அறிக்கையை வைத்திருக்க வேண்டும்.

உற்பத்தியாளர்கள் கொள்முதல் செய்யும் அனைத்துப் பொருட்களுக்கும் பில் வைத்திருக்க வேண்டும். கரும்பு ஜூஸ் உள்ளிட்ட அவ்வப்போது உடனடியாக விற்பனை செய்யப்படும் உணவுப்பொருட்களைத் தயாரித்த பின்னர் அதிக நேரம் இருப்பு வைத்திருக்கக் கூடாது. கம்மங்கூழ் போன்ற உணவுப்பொருட்கள் கடையை மூடும் வரை விற்பனையாகாமல் மீதாமானால், அவற்றை அப்புறப்படுத்திட வேண்டும். என அதிகாரிகள் அறிவுறுத்தி உள்ளனர்.

The post உணவுகளை தயாரிக்க சுத்தமான தண்ணீர் பயன்படுத்த வேண்டும்: உணவகங்களுக்கு அறிவுறுத்தல் appeared first on Dinakaran.

Read Entire Article