உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை விலையால் ஈர்க்கப்பட்டு தரமற்ற உணவுகளை ஆர்டர் செய்து ஆரோக்கியத்தை இழக்கும் மக்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை

3 weeks ago 3

பெரம்பூர்: மாற்றம் ஒன்றுதான் மாறாதது என்ற சொல் அனைத்து காலகட்டங்களிலும், அனைத்து விஷயங்களிலும் பொருந்தக்கூடிய ஒரு சொல்லாக உள்ளது. காரணம் கற்காலத்தில் தொடங்கி தற்போது வரை பல்வேறு பரிணாம வளர்ச்சிகளை மனிதர்கள் கண்டுள்ளனர். மேலும் ஒவ்வொரு துறையிலும் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த வளர்ச்சி மாற்றத்திற்கான அடையாளமாக உள்ளது. ஒவ்வொரு காலகட்டத்திலும் ஒவ்வொரு விதமான மாற்றங்களை நாம் கண்டு வருகிறோம்.

அந்த வகையில் கடந்த 20 வருடங்களில் அபரிவிதமான வளர்ச்சி மற்றும் மாற்றங்களை மனிதர்கள் அடைந்துள்ளனர். அதிலும் குறிப்பாக செல்போன் மற்றும் இன்டர்நெட் பயன்பாடு வந்த பிறகு மனிதர்களின் வாழ்க்கை முறை பல மாறுதல்களை அடைந்துள்ளது. தொழில்நுட்பமும் விஞ்ஞானமும் வளரவளர மனிதர்களின் ஆயுட்காலம் வளர வேண்டும். ஆனால் மாறாக மனிதர்களின் ஆயுட்காலம் குறைந்துகொண்டே வருகிறது. நம் முன்னோர்கள் பலர் நூறு வயதை கடந்து வாழ்ந்ததை நாம் பார்த்திருப்போம்.

ஆனால் தற்போது 60 வயதை முழுவதுமாக அடைவதற்குள் பல நோய்களுக்கு ஆளாகி 70 வயதை தொடுவது என்பது மனிதர்களுக்கு எட்டாக்கனியாக உள்ளது என்றே கூறலாம். ஒரு விஷயத்தை மறந்து அனைவரும் ஓடிக்கொண்டே இருக்கிறோம். இந்த உலகத்திற்கு மனிதர்கள் எதற்காக வந்தார்கள், எத்தனை நாள் வாழ போகிறார்கள் என்ற ரகசியம் தான் அது. அதனை மறந்து ஆயிரம், 500 வருடங்கள் வரை இங்கேயே வாழ்வது போல நினைத்துக்கொண்டு வாழும் காலத்தில் பல்வேறு கட்டமைப்புகளை மனிதர்கள் தங்களுக்காக ஏற்படுத்திக் கொள்கின்றனர்.

பணம் சம்பாதிப்பதற்காக ஓடிக்கொண்டே இருக்கும் மனிதர்கள் ஏதாவது ஒரு இடத்தில் நோய்வாய்ப்பட்டு கட்டிலில் படுக்கும்போது அந்த பணம் அவர்களது வாழ்நாளை எத்தனை நாளைக்கு கூட்டித் தருகிறது என்பதும் ஒரு கேள்விக்குறியாகவே அமைந்துவிடுகிறது. உதாரணத்திற்கு காலையில் சாப்பிடுவதில்லை, உடற்பயிற்சி செய்வதில்லை, கேட்டால் நேரமில்லை எனக் கூறுவார்கள். இதேபோன்று உழைப்புக்காக, பணத்திற்காக நேரத்தை ஒதுக்கும் மனிதர்கள் தங்களது உடலுக்காக ஒருபோதும் நேரத்தை ஒதுக்குவது கிடையாது. ஏதாவது ஒரு வகையில் உடல் பாதிக்கப்பட்டால் மட்டுமே நாம் வாழ்ந்த வாழ்க்கைமுறை தவறு என்பதை புரிந்து கொள்கிறார்கள்.

அந்த வகையில் அமெரிக்காவில் மிகப்பெரிய தொழிலதிபர் ஒருவர் தனது 45வது வயதில் மரணப்படுக்கையில் இருக்கும்போது என்னிடம் கோடிக்கணக்கான பணம் உள்ளது. ஆனால் அதை வைத்து எனது மரணத்தை தள்ளிப் போட முடியவில்லை, காரணம் எனது உடம்பிற்கு நான் உரிய மரியாதை தரவில்லை எனக் கூறிவிட்டு இறந்து போனார். 45 வயது வரை ஓடிஓடி உழைத்த அந்த கோடீஸ்வரர் அந்த பணத்தை வைத்து தனது ஆயுட்காலத்தை நீட்டிக்க முடியவில்லை. காரணம் பணத்தை கொடுத்து மருந்துகளையும் மருத்துவத்தையும் விலைக்கு வாங்கலாம்.

ஆனால் அதனை நமது உடல் ஏற்றுக்கொள்கிறதா? என்பதை பார்க்க வேண்டும். அந்த வகையில் கடந்த 10 வருடங்களாகவே உணவு முறையில் பல்வேறு மாற்றங்களை மனிதர்கள் ஏற்படுத்தி வந்துள்ளனர். முன்பெல்லாம் ஏதாவது ஒரு பண்டிகைக்கு துணி எடுக்கச் சென்றாலோ அல்லது எங்கேயாவது வீட்டில் இருந்து வெளியிடங்களுக்குச் சென்றாலோ ஓட்டல்களில் சென்று சாப்பிட்ட காலம் இருந்து வந்தது. ஆனால் இன்று மூன்று வேளை சாப்பிடும் பழக்கம் உள்ள வீடுகளில் கூட காலை அல்லது இரவு என ஏதாவது ஒரு வேளையில் ஓட்டல்களில் இருந்து வாங்கி சாப்பிட ஆரம்பித்து விட்டனர்.

குறிப்பாக காலையில் அருகில் உள்ள ஏதாவது ஒரு ஓட்டலில் இட்லி போன்ற உணவுகளை வாங்கி அதனை அவசர அவசரமாக பிள்ளைகளுக்கு கொடுத்து அனுப்புகின்றனர். மதிய சாப்பாட்டை மட்டும் வீட்டில் செய்து கட்டிக் கொடுக்கின்றனர். இவ்வாறு பல வீடுகளில் இதுபோன்ற செயல்பாடுகள் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில் துரித உணவகங்கள், ஓட்டல்கள், ரெஸ்டாரண்டுகள் உள்ளிட்டவை கணிசமாக அதிகரித்துள்ளன. இதேபோன்று தள்ளுவண்டி கடைகள், சாலையோர கடைகளும் அதிகரித்துள்ளன.

இது பத்தாது என்று தற்போது வீட்டிற்கு வந்து உணவு டெலிவரி செய்யும் வசதியும் வந்துவிட்டது. இதனால் வீட்டிலிருந்தவாரே தங்களுக்கு வேண்டிய ஓட்டல்களை தேர்வு செய்து அதில் இருந்து தங்களுக்கு பிடித்த உணவுகளை தேர்ந்தெடுத்து வீட்டில் அமர்ந்தபடியே உணவுகளை விரும்பி பொதுமக்கள் சாப்பிடுகின்றனர். இதனால் கடந்த 10 ஆண்டுகளில் ஓட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை கணிசமாக உயர்ந்து வருகிறது.

அந்த வகையில் இந்தியர்கள் வீட்டில் சமைப்பது குறைந்துள்ளதாகவும், உணவுகள் மற்றும் உணவு டெலிவரி சேவைகள், பதப்படுத்தப்பட்ட உணவுகள் ஆகியவற்றிற்கு செலவு செய்வது கடந்த 10 ஆண்டுகளில் 50 சதவீதம் அளவிற்கு அதிகரித்துள்ளதாகவும் புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் மற்றும் ஐசிஐசிஐ செக்யூரிட்டிஸ் தரவுகள் தெரிவிக்கின்றன. இந்தியாவில் அதிக வருவாய் கொண்ட மக்கள் கடந்த 2023ம் நிதி ஆண்டில் தங்கள் மாதாந்திர உணவு பட்ஜெட்டில் கிட்டத்தட்ட 50 சதவீதத்தை பதப்படுத்தப்பட்ட உணவுகள், உணவகங்கள் மற்றும் உணவு விநியோக சேவைகள் ஆகியவற்றில் செலவு செய்துள்ளனர்.

10 ஆண்டுகளுக்கு முன் இதற்கான செலவு என்பது 41.2 சதவீதமாக இருந்தது. இதே போல நடுத்தர வருவாய் கொண்ட மக்கள் இதற்கு செலவு செய்வதும் 16 சதவீதத்திலிருந்து 25 சதவீதமாக உயர்ந்துள்ளது. பதப்படுத்தப்பட்ட உணவுகளை வாங்குவதும், வெளியே உண்பதும் அதிகரித்துள்ள நிலையில் வீட்டில் சமைப்பது கணிசமாக குறைந்துள்ளது. உணவு விநியோக சேவைகள் மற்றும் வணிக செயலிகள் அதிகரிப்பு, வருவாய் அதிகரிப்பு மற்றும் மாறும் உணவு விருப்பங்கள் ஆகியவற்றின் காரணமாக இந்த போக்கு மேலும் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த ஆய்வறிக்கையின்படி அதிக வருவாய் உடையவர்கள் வீட்டில் சமைப்பதை தவிர்க்கின்றனர். பொதுமக்கள் பருப்பு, முட்டை, மீன் ஆகியவற்றிற்கு செலவழிப்பது குறைந்துள்ளது. நடுத்தர வருவாய் மக்கள் வெளி உணவுக்கு செலவு செய்வது 16 சதவீதத்திலிருந்து 25% ஆக உயர்ந்துள்ளது. உயர் வருவாய் உடையவர்கள் செலவு செய்வது 41.2% ல் இருந்து 50 சதவீதமாக உயர்ந்துள்ளது என ஆய்வு அறிக்கை கூறுகிறது. இதன் மூலம் படிப்படியாக மக்கள் வீடுகளில் சமைத்து சாப்பிடுவது என்பது குறைந்துள்ளது.

சுவைக்காக சாப்பிடுகிறோம் என நினைத்து அந்த உணவில் என்னென்ன சேர்த்து இருக்கிறார்கள், எந்த எண்ணெய்யால் செய்யப்பட்டது, எந்த மசாலா அதில் சேர்க்கப்பட்டுள்ளது என்பது பற்றி எந்த கவலையும் இல்லாமல் தற்போது மனிதர்கள் எடுக்கும் இந்த நிலைப்பாடு என்பது அவர்களின் உடலுக்கு வருங்காலத்தில் கேடு விளைவிக்கும் என்பதில் மாற்றுக் கருத்து இருக்க முடியாது. வணிகம் செய்பவர்கள் லாபத்தில் அடிப்படையில் செய்வார்கள். அந்த வகையில் ஒரு உணவுப் பொருளை விற்பனை செய்யும்போது சுவைக்காக என்ன வேண்டுமானாலும் அதில் சேர்ப்பார்கள்.

அதை சாப்பிடுபவர்களின் உடல்நிலை 10 வருடம் கழித்து எப்படி இருக்கும் என்பதை எல்லாம் உணவக ஊழியர்கள் சிந்தித்துக்கூட பார்க்க மாட்டார்கள். ஆனால் வீட்டில் சமைக்கும்போது பார்த்துப் பார்த்து எது உடலுக்கு நல்லதோ அதை மட்டுமே சமைப்பார்கள். எனவே ஓட்டல் சாப்பாடு கூடவே கூடாது என்று சொல்வதைவிட, என்றாவது ஒருநாள் தவறு இல்லை எனலாம். ஆனால் தினமும் ஒரு வேளையாவது ஓட்டல் சாப்பாடு வேண்டும் என நினைப்பவர்களுக்கு மருத்துவமனைகள்தான் வருங்காலத்தில் பதில் சொல்லும் என்பதே நிதர்சனமான உண்மை.

மாறிவரும் உணவு கலாச்சாரம் குறித்து புதுச்சேரியைச் சேர்ந்த இயற்கை மருத்துவம் மற்றும் மாற்று மருத்துவர் சந்தோஷ் சரவணன் கூறுகையில், ஆங்கிலத்தில் ப்ரொடக்டிவிட்டி என ஒரு வார்த்தை உள்ளது. நேரத்தை மிச்சப்படுத்துவது, பணத்தை மிச்சப்படுத்துவது போன்ற விஷயங்களை இது குறிக்கிறது. ஒரு குறிப்பிட்ட விஷயம் நான் செய்கிறேன் என்றால் அதற்கு எவ்வளவு நேரம் செலவாகிறது, இதற்கு பதில் அதை வெளியே விலை கொடுத்து வாங்கினால் நேரம் மிச்சம், செலவு மிச்சம் என கருதுகின்றனர்.

உதாரணத்திற்கு வீட்டில் இட்லி செய்ய வேண்டும் என்றால் அரிசி, உளுந்து போன்றவற்றை ஊற வைத்து கிரைண்டரில் அரைத்து இட்லி குண்டாவில் மாவை ஊற்றி இட்லி செய்ய வேண்டும். மேலும் அதனுடன் சேர்த்து சாப்பிட சட்னி அல்லது சாம்பார் செய்ய வேண்டும். இவ்வளவு வேலைகள் ஆகிறது. மேலும் சாப்பிட்டவுடன் பாத்திரங்களை கழுவி வைக்க வேண்டும். ஆனால் ஓட்டலில் சென்று இருவது ரூபாய் கொடுத்தால் 4 இட்லி, சட்னி சாம்பார் என அனைத்தும் கிடைத்து விடுகிறது.

அதை சாப்பிட்டு தூக்கி எறிந்துவிட்டுச் செல்லலாம் என்ற மனப்பக்குவத்தில் தற்போது பலரும் வந்து விட்டனர். சமைப்பதை பெரும்பாலானோர் தேவையில்லாத வேலை என கருதுகின்றனர்.‌ சீனா போன்ற நாடுகளில் சமையல் செய்வது என்பது மிகக் குறைவு.  அலுவலகத்தில் 12 மணி நேரம் முதல் 15 மணி நேரம் வரை வேலை செய்வார்கள். வீட்டிற்கு சென்று எட்டு மணி நேரம் தூங்குவார்கள். சமைப்பதற்கு என்று தனியாக பெரிய அளவில் நேரத்தை ஒதுக்க மாட்டார்கள். சீனாவில் ஸ்ட்ரீட் புட் என்ற ஒரு கான்செப்ட் உள்ளது.

மாலை 5 மணியிலிருந்து எட்டு மணி வரை அனைத்து இடங்களிலும் சமைத்த உணவு பொருட்கள் விற்பனை நடைபெறும். அதனை வாங்கி சாப்பிட்டுவிட்டு மறுநாளுக்கு தேவையானதை வாங்கி வைத்துக் கொள்வார்கள். தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் இதுபோன்ற கான்செப்ட் வந்துவிட்டது. கிச்சன் என்ற ஒரு விஷயத்தை பலரும் தவிர்த்து வருகின்றனர். குறிப்பாக வெளி மாநிலங்களில் இருந்து வந்து பணி புரிபவர்கள் மூன்று வேளையும் ஓட்டல்களில் சாப்பிடுகிறார்கள்.

தற்போது சென்னை போன்ற பெருநகரங்களில் பலரது வீடுகளில் கிட்சன் என்ற ஒரு கான்செப்ட் பெயரளவில் மட்டும் உள்ளது. அதற்கு பதில் பேன்ட்ரி எனப்படும் ஒரு கான்செப்ட்டை பயன்படுத்துகின்றனர். அதாவது ஒரு டீ, காபி அல்லது சாண்ட்விச் செய்ய மட்டுமே அந்த இடத்தை பயன்படுத்துகின்றனர். ஓட்டல்களில் சாப்பிடுவதால் படிப்படியாக பல பிரச்னைகள் வருகிறது. என்ன எண்ணெய் பயன்படுத்துகிறார்கள், என்ன கலர் பயன்படுத்துகிறார்கள் என எதுவுமே தெரியாது.

இதன் விளைவாக 30 வயதில் சர்க்கரை நோய், ரத்த கொதிப்பு, திடீரென மாரடைப்பு என பல விஷயங்களை நாம் தொடர்ந்து கேட்டுக் கொண்டே வருகிறோம். இதற்கெல்லாம் உணவுதான் காரணம் என்றால் யாரும் நம்ப மாட்டார்கள். ஒரு உணவை சாப்பிட்டு மறுநாள் ஒவ்வாமை ஏற்பட்டால் மட்டுமே அந்த உணவு சரியில்லை என கூறுகிறோம். ஆனால் தரமில்லாத குறிப்பிட்ட எண்ணெய், மசாலாக்களை தொடர்ந்து சாப்பிடும்போது அது நமது உடலில் பல மாற்றங்களை ஏற்படுத்துகிறது. ஆனால் இந்த மாற்றங்கள் சாப்பிட்டதால்தான் வந்தது என்பதை எந்த ஒரு சாட்சிகளை வைத்தும் நம்மால் நிரூபிக்க முடியாது.

மதுபானம் அதிகமாக சாப்பிடும் நபருக்கு லிவர் பிரச்னை வருகிறது என்றால், அவர் அதிகமாக மது பழக்கத்திற்கு அடிமையானவர், அதனால் பிரச்னை வந்தது எனக் கூறுகிறார்கள். அதுவே 30 வயது இளைஞனுக்கு சர்க்கரை நோய் வந்தால் எதனால் வந்தது என தெரியவில்லை என்கிறார்கள். 40 வயதில் மாரடைப்பு ஏற்பட்டால் ஏன் வந்தது என தெரியவில்லை என்கிறார்கள். ஆனால் இவை அனைத்திற்கும் மூல காரணமாக இருப்பது நாம் தினமும் சாப்பிடும் உணவுதான். எனவே உணவு விஷயத்தில் சோம்பேறித்தனம் பார்க்காமல் முடிந்தவரை தரமான உணவுகளை வீட்டில் சமைத்து சாப்பிடுவது அடுத்த தலைமுறையினரை நோய் இல்லாமல் வாழ வைக்கும் என தெரிவித்தார்.

* பிள்ளைகளை கெடுக்கும் பெற்றோர்
தற்போது சென்னை போன்ற பெரு நகரங்களில் மற்றொரு உணவு கலாச்சாரமும் அதிகரித்து வருகிறது. காலையில் பள்ளிக்கு கிளம்பும் மாணவர்கள் அன்றைக்கு மதிய உணவை எடுத்துச் செல்லவில்லை என்றால் அவர்களது பெற்றோர்கள் உணவு டெலிவரி செய்யும் நிறுவனங்கள் மூலம் தங்கள் பிள்ளைகளுக்கு எந்த உணவு பிடிக்குமோ அந்த உணவை ஓட்டல்களில் ஆர்டர் செய்து நேரடியாக பள்ளிகளுக்கு சென்று வாட்ச்மேனிடம் மாணவனின் பெயர் மற்றும் வகுப்பைக் கூறி கொடுத்துவிட்டு வந்து விடுகின்றனர்.

மதிய வேளையில் மாணவர்கள் அந்த உணவை சாப்பிடுகின்றனர். இதன் மூலம் பள்ளி பருவத்திலேயே மாணவர்கள் ஓட்டல்களில் சாப்பிடும் பழக்கத்தை அவர்களது பெற்றோர்களே ஊக்குவிக்கின்றனர். என்றாவது ஒருநாள் என்றால் பரவாயில்லை, ஆனால் வாரத்தில் இரண்டு மூன்று நாட்கள் இவ்வாறு சாப்பிடுகின்றனர். ஓட்டல்களின் சுவை மாணவர்களுக்கு பிடித்துப்போய், தொடர்ந்து இதேபோன்று ஆர்டர் செய்ய தங்களது பெற்றோர்களை வற்புறுத்துகின்றனர். தற்போது இந்த கலாச்சாரமும் சென்னை போன்ற பெரு நகரங்களில் அதிகரித்து வருகிறது.

* வேலைக்கு முக்கியத்துவம்
சென்னை, பெங்களூரு, ஐதராபாத், மும்பை போன்ற பெரு நகரங்களில் பெரும்பாலும் கணவன், மனைவி என இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கின்றனர். இதனால் வீட்டில் சமையல் செய்யக்கூடிய சூழ்நிலை மிகவும் குறைவாகவே உள்ளது. இதனால் இவர்கள் பெரும்பாலும் இரவு நேரங்களில் வீட்டிற்கு வரும்போது ஓட்டல்களில் உணவு வாங்கி வந்து சாப்பிடும் பழக்கத்தை வைத்திருந்தனர். சமீப காலமாக வீட்டிற்கே வந்து உணவு டெலிவரி செய்யும் வசதி வந்துவிட்ட காரணத்தினால் வீட்டில் இருந்தபடியே ஆன்லைனில் உணவுப் பொருட்களை ஆர்டர் செய்து சாப்பிடுகின்றனர்.

இதனால் சமைக்கும் நேரம் மற்றும் வீட்டு வேலைகள் அனைத்தும் மிச்சம் என நினைக்கின்றனர். ஆனால் உடல் உபாதைகள் எந்த அளவிற்கு ஓட்டல் உணவால் ஏற்படும் என்பதை மறந்து வேலைக்கு முக்கியத்துவம் தருகின்றனர். வேலை முக்கியம்தான், ஆனால் உயிர் வாழ்வதற்கு உணவு முக்கியம், அந்த உணவை எந்த அளவிற்கு சிறந்த முறையில் செய்து நமது உடலுக்கு வழங்க வேண்டும் என்பதை பெரும்பாலானவர்கள் மறந்ததே உணவகங்கள் அதிகரிக்க காரணமாக உள்ளது.

* கிளவுட் கிச்சன்
அமெரிக்காவில் கிளவுட் கிச்சன் என்ற கான்செப்ட் அறிமுகமானது. இதில் வீட்டில் சமைப்பதற்கு பதில் கிளவுட் கிச்சன் வைத்திருப்பவர்களிடம் நாம் முன்கூட்டியே நாளைக்கு என்ன வேண்டும் என்பதை ஆர்டர் செய்து விட்டால் நமக்கு என்ன உணவு தேவையோ அதனை அவர்கள் தயார் செய்து கொடுத்து விடுவார்கள். இந்த கலாச்சாரம் இந்தியாவிலும் பரவி தற்போது சென்னை, பெங்களூரு, ஐதராபாத், டெல்லி உள்ளிட்ட இடங்களில் அதிவேகமாக பரவி வருகிறது.

ஓட்டல்களுக்குச் சென்றால் அங்கு என்ன உள்ளதோ அதைத்தான் சாப்பிட வேண்டும். ஆனால் கிளவுட் கிச்சன் என்ற கான்செப்டில் நமக்கு என்ன வேண்டுமோ அதை அவர்கள் தயார் செய்து தருவார்கள். தற்போது இந்த முறையும் வேகமாக பரவி வருகிறது. ஏற்கனவே வீடுகளில் சமைப்பதில்லை, ஓட்டல்களில் சாப்பிடுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துள்ளது என்ற நிலை உள்ளது. தற்போது உணவு இண்டஸ்ட்ரியில் புதிது புதிதாக இது போன்ற கான்செப்ட்டுகள் வருகையால் வருங்காலத்தில் வீடுகளில் சமைப்பவர்களின் எண்ணிக்கை மேலும் குறையும் என்பதில் சந்தேகமே இல்லை.

The post உணவு டெலிவரி நிறுவனங்களின் சலுகை விலையால் ஈர்க்கப்பட்டு தரமற்ற உணவுகளை ஆர்டர் செய்து ஆரோக்கியத்தை இழக்கும் மக்கள்: மருத்துவர்கள் எச்சரிக்கை appeared first on Dinakaran.

Read Entire Article