
திருவனந்தபுரம்,
கோட்டயம் மாவட்டம் சங்கனாச்சேரி மைத்ரி நகரை சேர்ந்தவர் சாந்தி (வயது35). இவர் உணவு வினியோகம் செய்யும் தனியார் நிறுவனங்களை போன்று செல்போனில் ஆர்டர் எடுத்து தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் உள்ளிட்ட போதை பொருட்களை வாடிக்கையாளர்கள் கூறும் இடத்திற்கு சென்று வினியோகம் செய்து வந்தார். இதனை இவர் மிகவும் ரகசியமாக நடத்தி வந்தார்.
இந்தநிலையில் சங்கனாச்சேரி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் போதை பொருட்களுடன் சிலர் சிக்கினர். அவர்களிடம் நடத்திய விசாரணையில் சாந்தியின் இந்த செயல்பாடு போலீசாருக்கு தெரிய வந்தது.
இதையடுத்து அவரை மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் சங்கனாச்சேரி போலீசார் ரகசியமாக கண்காணித்து வந்தனர். அப்போது அவர் தனது ஸ்கூட்டரில் சென்று போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்தது உறுதி செய்யப்பட்டது.
இதையடுத்து சாந்தியின் வீட்டில் போதைப் பொருள் தடுப்பு பிரிவினர் மற்றும் போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டின் கழிவறையில் 2 பைகளில் பதுக்கி வைத்திருந்த தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் சிக்கின. அந்த புகையிலை பொருட்களை பறிமுதல் செய்த போலீசார் சாந்தியை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் புகையிலை, போதை பொருட்களை ஸ்கூட்டரில் கொண்டு சென்று 4 மடங்கு அதிக விலைக்கு விற்பனை செய்து வந்ததை அவர் ஒப்புக்கொண்டார். இதையடுத்து சாந்தி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர்.