
மும்பை,
மராட்டிய மாநிலம் துலே மாவட்டம் வதொடி கிராமத்தை சேர்ந்தவர் திபாபாய் பவரா (வயது 65). இவரது மகன் அவ்லேஷ் (வயது 25).
இதனிடையே, திபாபாய் நேற்று இரவு வீட்டில் மீன் குழம்பு சமைத்து வைத்துவிட்டு உறங்கியுள்ளார். ஆனால், வீட்டிற்குள் நுழைந்த தெருநாய் சமையல் அறையில் இருந்த மீன் குழம்பு, சாப்பாடை சாப்பிட்டு சென்றுள்ளது.
இந்நிலையில், வேலைக்கு சென்ற அவ்லேஷ் மது குடித்துவிட்டு நள்ளிரவு வீட்டிற்கு வந்துள்ளார். சமையல் அறைக்கு சென்ற அவ்லேஷ் சாப்பாடு உள்ளதா? என பார்த்துள்ளார். ஆனால், தெரு நாய் உணவை சாப்பிட்டு சென்றதால் அங்கு எதுவும் இல்லை.
இதையடுத்து அவ்லேஷ் உறங்கிக்கொண்டிருந்த தனது தாயாரை எழுப்பி உணவு சமைக்கும்படி கூறியுள்ளார். ஆனால், ஆழ்ந்த உறக்கத்தில் இருந்த திபாபாய் சமைக்க மறுத்துவிட்டார். மேலும், உறக்கத்தில் அவர் எந்த பதிலும் அளிக்கவில்லை. இதனால் ஆத்திரமடைந்த அவ்லேஷ் மதுபோதையில் வீட்டில் இருந்த கட்டையால் தாயார் திபாபாய் பவராவை சரமாரியாக தாக்கினார். இதில் ரத்த வெள்ளத்தில் திபாபாய் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
மதுபோதையில் இருந்த அவ்லேஷ் தாயார் அருகிலேயே படுத்து உறங்கியுள்ளார். இன்று காலை மதுபோதை தெளிந்ததும் தாயாரை தானே அடித்துக்கொன்றதை அவ்லேஷ் உணர்ந்தார். இந்த சம்பவம் குறித்து அறிந்த அக்கம்பக்கத்தினர் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அவ்லேசை கைது செய்து சிறையில் அடைத்தனர்.