உடை விவகாரம்: உதயநிதி ஸ்டாலினுக்கு எதிராக சென்னை ஐகோர்ட்டில் வழக்கு

3 months ago 20

சென்னை,

துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் தமிழ் கலாசார உடை அணிய வேண்டும் என்று உத்தரவிட கோரி சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இதுதொடர்பாக சென்னை ஐகோர்ட்டில், சேலையூரைச் சேர்ந்த வக்கீல் சத்தியகுமார் என்பவர் தாக்கல் செய்துள்ள மனுவில், "1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட தி.மு.க., தமிழ் மொழி மற்றும் கலாசாரத்தை மேம்படுத்தி வருகிறது. இதன் அடிப்படையில் 1967-ம் ஆண்டு தமிழ்நாட்டில் தி.மு.க., ஆட்சியை பிடித்தது. அப்போது தி.மு.க., தலைவராகவும், முதல்-அமைச்சராகவும் இருந்த அறிஞர் அண்ணா, தங்கள் கட்சி நிர்வாகிகள் தமிழ் கலாசாரப்படி உடை அணிய வேண்டும் என்று வலியுறுத்தினார்.

அவரை தொடர்ந்து முதல்-அமைச்சர் பதவிக்கு வந்த கருணாநிதி அதை பின்பற்றினார். தற்போது முதல்-அமைச்சராக இருக்கும் மு.க.ஸ்டாலின் தமிழ் கலாசார உடை அணிந்து வருகிறார்.

2021-ம் ஆண்டு எம்.எல்.ஏ.வாக தேர்ந்தெடுக்கப்பட்ட உதயநிதி ஸ்டாலின், 2022-ம் ஆண்டு அமைச்சராக பதவி ஏற்றார். தற்போது கடந்த செப்டம்பர் மாதம் முதல் அவர் துணை முதல்-அமைச்சராக பதவி வகித்து வருகிறார். ஆனால், தமிழ் கலாசாரப்படி உடை அணிவது இல்லை. சாதாரண உடையான ஜீன்ஸ், டி.சர்ட் அணிந்து அனைத்து அரசு நிகழ்ச்சிகளிலும் கலந்து கொள்கிறார்.

தலைமைச் செயலகம் ஊழியர்களுக்கு உடை கட்டுப்பாட்டு விதிகளை வகுத்து கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் 1-ந்தேதி தமிழ்நாடு அரசு பிறப்பித்துள்ள அரசாணையின்படி, துணை முதல்-அமைச்சர் இதுபோல உடை அணியக்கூடாது. ஆனால், ஜீன்ஸ் பேண்ட், டி.சர்ட் அணிந்து துணை முதல்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அரசு விழாக்களில் கலந்து கொள்கிறார். அரசியல் அமைப்புச் சட்டத்தின்படி அவர் இந்த மாநில பிரதிநிதியாக திகழ்கிறார். அப்படிப்பட்ட மதிப்புக்குரிய பதவியை வகித்துக் கொண்டு, இதுபோல சாதாரண உடைகளை அணியக்கூடாது. எனவே, 2019-ம் ஆண்டு அரசாணையின்படி அரசு விழாக்களில் பங்கேற்கும்போது தமிழ் கலாசார மற்றும் முறையான உடைகளை அணிய உதயநிதி ஸ்டாலினுக்கு உத்தரவிட வேண்டும்" என்று அதில் கூறப்பட்டுள்ளது. இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வர உள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

Read Entire Article