உஜ்ஜையினி: உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயிலின் கருவறைக்குள் மகாராஷ்டிரா முதல்வரின் மகன் அனுமதிக்கப்பட்டது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து விசாரணைக்கு மபி அரசு உத்தரவிட்டுள்ளது. மபி மாநிலம் உஜ்ஜைனியில் உள்ள மகாகாலேஷ்வர் கோயில் சிவபெருமானுக்கு அர்ப்பணிக்கப்பட்டுள்ளது. இது நாட்டிலுள்ள 12 ‘ஜோதிர்லிங்க’ கோயில்களில் ஒன்றாகும். புகழ்பெற்ற இந்த கோயிலுக்கு ஆண்டு முழுவதும் ஏராளமான பக்தர்கள் வருகிறார்கள்.
இந்த நிலையில்,மகாராஷ்டிரா முதல்வர் ஏக்நாத் ஷிண்டேயின் மகன் ஸ்ரீகாந்த் ஷிண்டே நேற்றுமுன்தினம் குடும்பத்துடன் உஜ்ஜைனி கோயிலுக்கு சென்றுள்ளார். அப்போது ஸ்ரீகாந்தும் அவரது மனைவி மற்றும் இரண்டு பேர் தடை செய்யப்பட்ட கோயிலின் கருவறைக்குள் சென்றுள்ளனர். இது தொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகியது.
ஸ்ரீகாந்த் ஷிண்டே கல்யாண் தொகுதி எம்பியாக உள்ளார். இந்த சம்பவத்துக்கு காங்கிரஸ் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது. இது குறித்து பேசிய காங்கிரஸ் எம்எல்ஏ மகேஷ் பர்மார், “ஒரு சாதாரண பக்தர் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் நின்று மஹாகாலேஷ்வரரை தரிசனம் செய்ய வேண்டிய நிலையில், விஐபிக்கள் கருவறைக்குள் நுழைய தடை விதிக்கப்பட்டிருந்தும் அனுமதிக்கப்படுகின்றனர்,” என்றார்.
The post உஜ்ஜைனி கோயில் கருவறைக்குள் நுழைந்த மகாராஷ்டிர முதல்வர் மகன்: விசாரணை நடத்த மபி அரசு உத்தரவு appeared first on Dinakaran.