உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிக்க சஞ்சீவ் கண்ணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை

2 days ago 1

புதுடெல்லி: உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிக்க தற்போதைய தலைமை நீதிபதி சஞ்சீவ் கண்ணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை செய்துள்ளார். குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு பிறகு, உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாய் அடுத்த மாதம் பொறுப்பேற்க உள்ளார்.உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக சஞ்சீவ் கண்ணா கடந்த 2024ம் ஆண்டு நவம்பரில் பதவியேற்றார். இவரது பதவிக்காலம் வரும் மே 13ம் தேதியுடன் நிறைவடைகிறது.

இந்த சூழலில், உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியை பரிந்துரை செய்யுமாறு ஒன்றிய சட்ட அமைச்சகம் சஞ்சீவ் கண்ணாவிற்கு கடந்த வாரம் கடிதம் அனுப்பியது. இந்நிலையில், தனக்கு அடுத்ததாக உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி பொறுப்புக்கு நீதிபதி பி.ஆர். கவாய்யின் பெயரை சஞ்சீவ் கண்ணா பரிந்துரை செய்துள்ளார்.குடியரசுத் தலைவர் திரவுபதி முர்மு ஒப்புதல் வழங்கும் பட்சத்தில், உச்ச நீதிமன்றத்தின் 52-வது தலைமை நீதிபதியாக மே 14ம் தேதி பி.ஆர். கவாய் பொறுப்பேற்பார்.

மகாராஷ்டிராவின் அமராவதியில் நவம்பர் 24, 1960 அன்று பிறந்த நீதிபதி கவாய், 1985 இல் தனது சட்டப் பணியைத் தொடங்கினார். ஆகஸ்ட் 1992 ல், அவர் மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வில் உதவி அரசு வழக்கறிஞராகவும் கூடுதல் அரசு வழக்கறிஞராகவும் நியமிக்கப்பட்டார். பின்னர் 2000ம் ஆண்டில் அதே அமர்வில் அரசு வழக்கறிஞராக பொறுப்பேற்றார். நீதிபதி கவாய் நவம்பர் 14, 2003 அன்று பம்பாய் உயர் நீதிமன்றத்தின் கூடுதல் நீதிபதியாக நியமிக்கப்பட்டார், மேலும் 2005 ல் நிரந்தர நீதிபதியானார். மும்பையில் உள்ள உயர் நீதிமன்றத்தின் முதன்மை இருக்கையிலும், நாக்பூர், அவுரங்காபாத் மற்றும் பனாஜியில் உள்ள அமர்வுகளிலும் பணியாற்றினார். மே 24, 2019 அன்று உச்ச நீதிமன்றத்திற்கு அவர் பதவி உயர்வு பெற்றார்.

The post உச்ச நீதிமன்றத்தின் அடுத்த தலைமை நீதிபதியாக பி.ஆர். கவாயை நியமிக்க சஞ்சீவ் கண்ணா ஒன்றிய அரசுக்கு பரிந்துரை appeared first on Dinakaran.

Read Entire Article