உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள்!

1 month ago 7

அமெரிக்காவில் எண்ணற்ற வாய்ப்புகள் உள்ளன என்பது எல்லோருக்கும் தெரிந்ததே. அங்கு திறமை, ஆற்றல், கண்டுபிடிப்புகள் போன்றவை முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது. அங்குள்ள இடங்களைப் பணம் கொடுத்து வாங்கலாம்.எந்த விதமான தொழிலும் தொடங்கலாம். அப்படிப்பட்ட தேசத்தில் ஒரு பரந்த நிலப்பரப்பு இருந்தது, அதனை எதற்கும் பயனற்றது என்று கருதி எவருமே வாங்க முன்வரவில்லை. விவசாயத்திற்கோ அல்லது கட்டடம் கட்டி மக்கள் குடியேறத் தகுதியற்ற பகுதி இது என்று கருதினார்கள்.

எல்லோராலும் ஒதுக்கப்பட்ட அந்த இடத்தை ஒருவர் துணிச்சலாக வாங்கினார். கரடுமுரடான கருங்கற்கள் நிரம்பிய பகுதிகளில் உலகத் தலைவர்களின் முகங்களை அங்கு தத்துரூபமாகச் செதுக்கினார். பசுமை நிரம்பி வழிய பல செயற்கை நீரோடைகளை ஏற்படுத்தினார். ஏராளமான பொழுதுபோக்கு அம்சங்களை அங்கு உண்டாக்கினார். எவராலும் வாழ முடியாத பகுதி, ஒருவரும் திரும்பிப் பார்க்க விரும்பாத பகுதி இன்று உலகின் கோடிக்கணக்கான மக்கள் ஆண்டுதோறும் சுற்றுலா வரும் டிஸ்னிலேண்டாக விளங்குகிறது.

சாதனைகள்புரிய சூழ்நிலைகளோ, வயதோ, ஒரு தடையாக என்றுமே இருந்ததில்லை. திரைப்படங்களும் நடிகர்களும் புகழுடன் இருந்த காலத்தில் கார்ட்டூன் படங்களை அளித்து உலகப்புகழ் பெற்றவர்தான் வால்ட் டிஸ்னி. இன்றுவரை அவரது மிக்கிமெளஸ், டொனால்ட் டக் போன்றவை அழியாப் புகழுடன் விளங்கிவருகின்றன. கரடுமுரடான நிலப்பகுதியைக் கனவு உலகமாகவே மாற்றிக் காட்டியது அவரின் சாதனை.

வெற்றி பெறுவதற்கான முதல் தேவை வெற்றி பெற வேண்டும் எனும் லட்சிய வேட்கைதான். அந்த வேட்கையும் தேடலும் இருப்பவர்கள் வாய்ப்புகளுக்காகக் காத்திருப்பதில்லை. வாய்ப்புகளைத் தாங்களே ஏற்படுத்திக் கொண்டு இலக்கை நோக்கி பயணித்துக் கொண்டேயிருப்பார்கள். அந்த பயணத்தில் ரிஸ்க் எடுக்கவும் அவர்கள் தயங்குவதில்லை. அப்படி நீண்டதூரம் பயணித்து மிகச்சிறந்த வெற்றியைப் பெற்ற சாதனை மங்கைதான் ஜோயா அகர்வால். டெல்லியைச் சேர்ந்தவர் ஜோயா அகர்வால். சிறுவயதிலிருந்தே விமானியாக வேண்டும் என்ற தனது விருப்பத்தை இலக்காக மாற்றிக்கொண்டார். எட்டு வயதாக இருக்கும்போது மொட்டைமாடியில் விமானத்தை பார்க்கும்போதெல்லாம் ஒரு நாள் அந்த விமானத்தில் சென்று வானில் உள்ள நட்சத்திரங்களைத் தொட்டுவிடுவேன், என்று நம்பிக்கையுடன் சொல்லிக் கொள்வார்.

சாதாரணக் குடும்பத்தில் பிறந்த ஜோயா அகர்வால் அவரது எல்லையைத் தாண்டி கனவுகாண்பதாக குடும்பத்தினர் நினைத்தார்கள். படிப்பு முடித்த பின்பு நல்ல குடும்பத்தில் திருமணம் செய்து கொடுப்பதே அவருடைய அம்மாவின் விருப்பமாக இருந்தது. அதனால் தன்னுடைய கனவைப் பெற்றோரிடம் சொல்லத் தயங்கினார் ஜோயா அகர்வால்.

பத்தாம் வகுப்பு முடித்ததும் விமானி ஆக வேண்டும் என்ற தன்னுடைய கனவை முதன்முதலில் சொன்னபோது அவரது அம்மா அழத் தொடங்கிவிட்டார். அப்பாவோ விமானியாக வேண்டும் என்றால் நிறைய செலவாகுமே என்று நினைத்து கவலைப்பட்டார். ஒரு வழியாக 12ஆம் வகுப்பில் ஜோயா அகர்வால் நல்ல மதிப்பெண் பெற்று கல்லூரியில் இயற்பியல் துறையில் சேர்ந்து படித்தார். அத்துடன் பகுதிநேரமாக விமானிக்கான பயிற்சிப் படிப்பிலும் சேர்ந்தார். ஆனால் பெற்றோருக்கு எந்த கஷ்டமும் கொடுக்காமல் சிறுவயதிலிருந்தே சேமித்து வைத்த பணத்தைக் கொண்டு கட்டணம் செலுத்திப் படித்து வந்தார். கல்லூரி வகுப்பை முடித்துவிட்டு விமானிக்கான பயிற்சி படிப்பையும் முடித்துவிட்டு வீடு திரும்ப இரவு வெகு நேரமாகிவிடும். அதன்பிறகு கல்லூரிப் பாடங்களைப் படித்து முடிப்பார். இப்படியே மூன்று வருடங்கள் சென்றன. கல்லூரியில் நல்ல மதிப்பெண்கள் எடுத்து முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றார். அதேபோல் விமானிக்கான படிப்பு மற்றும் பயிற்சியும் முடித்தார். ஆனால் வேலை கிடைக்கவில்லை. இரண்டு ஆண்டுகள் காத்திருந்தார்.

இந்த நிலையில் ஏர் இந்திய விமான நிறுவனம் ஏழு விமானிகள் தேவை என்ற அறிவிப்பை வெளியிட்டது. அதற்கான தேர்வில் 3000 பேர் கலந்துகொண்டார்கள். அதில், ஜோயா அகர்வால் கலந்துகொண்டார். எல்லாச் சுற்றுக்களிலும் தேர்ச்சி பெற்று விமானியாகத் தேர்வாகி தனது இலக்கில் வெற்றி பெற்றார்.2004ஆம் ஆண்டு முதல் விமானத்தை துபாய்க்கு இயக்கினார். இறுதியாக அந்த நட்சத்திரங்களை தொட்டுவிட்டேன் என்றார் மகிழ்ச்சியுடன் ஜோயா அகர்வால். வாழ்க்கையில் எதுவும் எனக்கு எளிதாகக் கிடைத்துவிடவில்லை,தொடர்ச்சியான முயற்சியும், பயிற்சியும்தான் எனது வெற்றியைச் சாத்தியமாக்கியது. அது மட்டுமல்ல எனக்கான வாய்ப்பை நானே ஏற்படுத்திக் கொண்டேன், என்கிறார் ஜோயா அகர்வால்.

அதன் பிறகு இளம் கேப்டன் ஜோயா அகர்வால் தன்னுடைய தலைமையில் 235 பயணிகளுடன் ஏர் இந்தியா விமானம் ஒன்றில் ஜனவரி 9ஆம் தேதி சான்பிரான்சிஸ்கோவில் இருந்து இந்தியாவின் பெங்களூரு வரை 16,000 கிலோ மீட்டர் தூரத்தை 17 மணி நேரம் தொடர்ச்சியாக பயணித்து பெண் விமானிகள் குழு சாதனை படைத்தது. இந்த நீண்ட பயணத்துக்கு தலைமை வகித்த கேப்டன் ஜோயா அகர்வால் எல்லோராலும் பாராட்டைப் பெற்றார். உலகில் முதல் முறையாக பெண் விமானிகள் குழு மூலமாக இயக்கி வரலாற்றுச் சாதனை படைத்தார் ஜோயா அகர்வால்.

இவரது சாதனையைப் பாராட்டி அமெரிக்க விமான அருங்காட்சியத்தில் இந்தியக் குழுவின் கேப்டனான பெண் விமானி ஜோயா அகர்வால் புகைப்படம் இடம்பெற்றுள்ளது. முதன்முதலில் 1980 ஆம் ஆண்டு சான்பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையம் திறக்கப்பட்டது. விமானத்துறையின் வரலாறு தொடர்பான 1,50,000 தொல்பொருள்கள் இந்த அருங்காட்சியத்தில் இடம்பெற்றுள்ளன. ஆனால் இந்த அருங்காட்சியத்தில் இதுவரை எந்த ஒரு மனிதரின் புகைப்படமும் இடம் பெற்றது இல்லை. முதன்முதலாக ஜோயா அகர்வால் என்ற சாதனை மங்கை அமெரிக்கா அருங்காட்சியத்தில் இடம்பெற்றிருப்பது இதுவே முதல் முறை.

இது மிகவும் பெருமை அளிப்பதாகவும், தன்னால் இதனை நம்பமுடியவில்லை என்றும் பெண் விமானி ஜோயா அகர்வால் தெரிவிக்கின்றார். எட்டு வயது சிறுமியாக இருக்கும்போது தனது மொட்டை மாடியில் அமர்ந்து நட்சத்திரங்களைப் பார்த்து விமானியாக வேண்டும் என்ற கனவு கண்டேன். தற்போது அமெரிக்கா அருங்காட்சியகத்தில் நான் இடம் பெற்றிருப்பது மிக பெரிய மரியாதை. இது எனக்கும், எனது தாய் நாட்டுக்கும் ஒரு மிகச்சிறந்த தருணம் என்கிறார் ஜோயா அகர்வால்.

இன்றைய பெண்கள் தங்கள் கனவுகளை எதற்காகவும் விட்டுக் கொடுக்கக்கூடாது என்று அழுத்தம் திருத்தமாகக் கூறுகிறார் ஜோயா அகர்வால்.சமூகம் எதிர்த்தாலும் உங்கள் கனவுகளைத் தயவுசெய்து விட்டு விடாதீர்கள், இது நமது நாட்டில் பல பெண்கள் எதிர்கொள்ளும் சவாலாகும். எந்த ஒரு இலக்கை நீங்கள் தீர்மானித்தாலும் உங்கள் கனவுகளை ஒருபோதும் கைவிடாமல் தொடருங்கள். எல்லாவற்றிக்கும் மேலாக வாய்ப்புக்காக காத்திருக்காமல், உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள் என்ற அப்துல் கலாம் அவர்களின் நம்பிக்கை வார்த்தைகளை கடைப்பிடித்து வெற்றிபெற கற்றுக்கொள்ளுங்கள். சாதாரணக் குடும்பத்தில் பிறந்து சாதித்து, இளம்பெண்களால் எல்லாத் துறைகளிலும் வெல்ல முடியும் என்று நிரூபித்த இந்த சாதனைப்பெண், சாதிக்கத் துடிக்கும் ஒவ்வொருவருக்கும் ஒரு ஊக்க சக்தி என்பதில் ஐயமில்லை.

The post உங்களுக்கான வாய்ப்பை நீங்களே உருவாக்குங்கள்! appeared first on Dinakaran.

Read Entire Article