மாஸ்கோ,
ஐரோப்பிய நாடுகளில் ஒன்றான உக்ரைன் அண்டை நாடான ரஷியாவின் அச்சுறுத்தல்களை எதிர்கொள்ள உலகின் சக்தி வாய்ந்த ராணுவ கூட்டமைப்பான நேட்டோவில் இணைந்து பாதுகாப்பு தேட முயன்றது.இதற்கு எதிர்ப்பு தெரிவித்து வந்த ரஷியா கடந்த 2022-ம் ஆண்டு பிப்ரவரி 24-ந்தேதி உக்ரைன் மீது போரை தொடங்கியது. இந்த போரில் அமெரிக்கா மற்றும் பல்வேறு மேற்கத்திய நாடுகள் உக்ரைனுக்கு பக்கபலமாக இருந்து வருகின்றன.
அந்த நாடுகள் வழங்கும் ஆயுதங்களை கொண்டு உக்ரைன் ராணுவம், ரஷிய படைகளை எதிர்த்து தொடர்ந்து சண்டையிட்டு வருகிறது. அதேவேளையில் ரஷியாவும் போரில் இருந்து பின்வாங்கபோவதில்லை என்பதில் திட்டவட்டமாக உள்ளது.இதனால் போர் முடிவின்றி நீண்டு வருகிறது. இருநாடுகள் இடையேயான போர் கடந்த 19-ந்தேதி 1,000 நாட்களை நிறைவு செய்தது. இந்த சூழலில் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து வழங்கிய அதிக சக்தி வாய்ந்த ஏவுகணைகளை கொண்டு ரஷியாவின் உள்பகுதிகளில் உக்ரைன் அண்மையில் தாக்குதல் நடத்தியது. இது போர் பதற்றத்தை மேலும் அதிகரிக்க செய்தது.
இதற்கிடையே, மேற்கத்திய நாடுகளை எச்சரிக்கும் விதமாக, பல ஆயிரம் கி.மீ. தொலைவு சென்று தாக்குதல் நடத்தும் திறன் கொண்ட ஐசிபிஎம் ரக ஏவுகணைகளை கொண்டு மிகவும் பக்கத்தில் இருக்கும் உக்ரைன் நகர் மீது ரஷியா தாக்குதல் நடத்தியது. இது சர்வதேச அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனைத் தொடர்ந்து நாட்டு மக்களுக்கு உரையாற்றிய புதின் பேசியதாவது: "ரஷியாவின் புதிய ஏவுகணையை தடுப்பதற்கு அமெரிக்க வான் பாதுகாப்பு அமைப்புகளால் முடியாது. இது ஒலியின் வேகத்தைவிட பத்து மடங்கு அதிவேகத்தில் செல்லும். ரஷியாவை தாக்க ஏவுகணைகள் வழங்கும் உக்ரைனின் நட்பு நாடுகளுக்கு எதிராகவும் இது பயன்படுத்தப்படும்.எங்கள் நாட்டுக்கு எதிராக ஆயுதங்களைப் பயன்படுத்த அனுமதிக்கும் நாடுகளின் ராணுவத்துக்கு எதிராக எங்கள் ஆயுதங்களைப் பயன்படுத்த எங்களுக்கு உரிமை உண்டு என்று நாங்கள் நம்புகிறோம். உக்ரைனின் ஆக்கிரமிப்பு தொடர்ந்தால், நாங்கள் தக்க பதிலடி கொடுப்போம். இதுகுறித்து மேற்கத்திய நாடுகள் தீவிரமாக சிந்திக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.