
பிரயாக்ராஜ்,
உத்தர பிரதேசத்தில் 144 ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெற கூடிய மகா கும்பமேளா நிகழ்ச்சி கடந்த ஜனவரி 13-ந்தேதி தொடங்கியது. இந்தியாவின் பழமையான கலாசாரம் மற்றும் மத பாரம்பரியங்களை உலகளவில் முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாக மாற்றும் பெருமை மிக்க மகா கும்பமேளாவுக்கு இந்த வருடம் 40 கோடி பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்பட்டது.
அவர்களின் வருகையை கவனத்தில் கொண்டு, 10 ஆயிரம் ஏக்கர் பரப்பளவில் வசதி ஏற்படுத்தப்பட்டது. 1,800 ஹெக்டேர் பரப்பளவில் வாகன நிறுத்த வசதிகள், 2,750 கண்காணிப்பு கேமராக்கள், 15 ஆயிரம் துப்புரவு பணியாளர்கள், 25 ஆயிரம் தொழிலாளர்கள், 24 மணிநேரமும் செயல்படும் கட்டுப்பாட்டு மையம் உள்ளிட்டவற்றை அரசு அமைத்திருந்தது. இதனால், ரூ.2 லட்சம் கோடி வருவாய் கிடைக்க கூடும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது.
இந்நிலையில், எந்தவித பெரிய அசம்பாவித சம்பவங்களும் இன்றி நேற்று வரையிலான 45 நாட்களில் இந்த மகா கும்பமேளா நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. 65 கோடிக்கும் கூடுதலான பக்தர்கள் கும்பமேளாவில் பங்கேற்று புனித நீராடியுள்ளனர்.
இந்த நிகழ்ச்சிக்காக பணியாற்றிய ரெயில்வே தொழிலாளர்களை பாராட்டுவதற்காக மத்திய ரெயில்வே துறை மந்திரி வைஷ்ணவ் பிரயாக்ராஜ் நகருக்கு இன்று வருகை தந்துள்ளார். அவர் செய்தியாளர்களிடம் அளித்த பேட்டியின்போது, கடைசியாக 2019-ம் ஆண்டு நடந்த கும்பமேளாவின்போது, 4 ஆயிரம் ரெயில்கள் இயக்கப்பட்டன.
இந்த முறை இதனை விட 3 மடங்கு கூடுதலாக ரெயில்களை இயக்க திட்டமிடப்பட்டது. எனினும், 4 மடங்கு கூடுதலான ரெயில்கள் இயக்கப்பட்டன. இந்த கும்பமேளாவில் 4.5 முதல் 5 கோடி பயணிகள் 16 ஆயிரத்திற்கும் கூடுதலான ரெயில்களில் அழைத்து வரப்பட்டு, பின்னர் அவர்களுடைய சொந்த இடங்களுக்கு கொண்டு சென்று விடப்பட்டனர்.
இதில் பெரிய சாதனை என்னவெனில், மாநில மற்றும் மத்திய அரசின் அனைத்து துறைகள் மற்றும் ரெயில்வே தொழிலாளர்கள் என அனைவரும் ஒன்றிணைந்து பணியாற்றியுள்ளனர். இதற்காக நான் நன்றி தெரிவித்து கொள்ள விரும்புகிறேன். இந்த வழியில், நாம் அனைவரும் ஒன்றாக இணைந்து செயல்பட்டால், நம்மை ஒருவரும் தோற்கடிக்க முடியாது என்று கூறியுள்ளார்.
இந்த நிகழ்ச்சிக்காக ரூ.5 ஆயிரம் கோடி நிதியை ரெயில்வே நிர்வாகம் முதலீடு செய்துள்ளது. 21 ரெயில்வே மேம்பாலங்கள் மற்றும் சுரங்க பாதைகள் கட்டப்பட்டன. இவற்றில் கங்கையாற்றின் மீது கட்டப்பட்ட ஒரு புதிய பாலமும் அடங்கும். ஒவ்வொரு ரெயில் நிலையத்திலும் ரெயில்கள், பாதுகாப்பாக பயணிகளை ஏற்றி, இறக்க வசதியாக முறையான ஏற்பாடுகள் செய்யப்பட்டன.
இந்த காலகட்டத்தில், புதிய வகையான நடை மேம்பாலங்கள் கட்டப்பட்டன. பயணிகளை மனதில் கொண்டு, அனைத்து வகையான ஏற்பாடுகளையும் ரெயில்வே மேற்கொண்டுள்ளது என்றும் கூறியுள்ளார்.