உ.பி. தீ விபத்து இதயத்தை உலுக்குகிறது: மல்லிகார்ஜுன கார்கே

2 hours ago 2

புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் ஜான்சி மாவட்டத்தில் உள்ள மகாராணி லட்சுமி பாய் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் குழந்தைகள் பராமரிப்புப் வார்டில் வெள்ளிக்கிழமை இரவு 10.45 மணியளவில் திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

தகவலறிந்து தீயணைப்புத் துறை மற்றும் ராணுவ தீயணைப்பு வாகனம் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வரும் பணியில் ஈடுபட்டன. எனினும் தீயில் கருகியும், கரும்புகை காரணமாக மூச்சுத் திணறல் ஏற்பட்டும் 10 பச்சிளம் குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. 37 குழந்தைகள் பாதுகாப்பாக மீட்கப்பட்டன. உயிரிழப்பு மேலும் அதிகரிக்கக் கூடும் என்று அஞ்சப்படுகிறது. ஷார்ட் சர்க்யூட் மின்கசிவு காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம் என்று முதல் கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில், இந்த சம்பவத்தில் குழந்தைகள் உயிரிழந்தது இதயத்தை உலுக்குகிறது என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்துள்ளார். அவர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "உத்தரபிரதேச மாநிலம் ஜான்சியில் உள்ள மருத்துவக் கல்லூரியில் ஏற்பட்ட தீ விபத்தில் அப்பாவி குழந்தைகள் உயிரிழந்த செய்தி மிகுந்த வேதனை அளிக்கிறது. இதயத்தை உலுக்கும் இந்த விபத்தில் உயிரிழந்த அனைத்து குழந்தைகளின் குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக்கொள்கிறோம். அவர்களின் குடும்பத்தினருக்கு இந்த துக்கத்தை தாங்கும் சக்தியை இறைவன் கொடுக்க வேண்டும்.

இந்த விபத்துக்கான காரணங்களை ஆராய்ந்து, இதுபோன்ற அலட்சியத்தில் ஈடுபட்டவர்கள் யாராக இருந்தாலும் அவர்கள் மீது கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்று அரசை கேட்டுக்கொள்கிறோம்" என்று பதிவிட்டுள்ளார்.

Read Entire Article