சென்னை: “உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசல் விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் தானாக முன்வந்து தலையிட்டு நீதி விசாரணை நடத்திப் பாதிக்கப்பட்டவர்களுக்கு நியாயமும் சிறுபான்மை சமூகத்துக்குப் பாதுகாப்பையும் உறுதி செய்ய வேண்டும்” என்று மமக தலைவர் எம்.எச்.ஜவாஹிருல்லா வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் பகுதியில் உள்ள ஷாஹி ஜாமா பள்ளிவாசலில் அதிகாரிகள் ஆய்வுக்கு வருவதை எதிர்த்துஅறவழியில் போராடிய மக்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியதில் மூன்று முஸ்லிம்கள்படுகொலை செய்யப்பட்டுள்ளனர். 1991-ல் இயற்றப்பட்ட வழிப்பாட்டு தலங்கள் பாதுகாப்பு சட்டம் ஆகஸ்ட் 15, 1947-க்கு முன்பு கட்டப்பட்ட பள்ளிவாசல்கள் குறித்த உரிமை கோரல்கள் குறித்து புதிய வழக்குகளோ சட்ட நடவடிக்கைகளோ எடுக்க இயலாது என வரையறுத்துள்ளது. இந்தச் சட்டம் விதித்துள்ள தடையை மீறி உபி மாநிலம் சம்பலில் முகலாயர் காலத்தில் கட்டப்பட்ட சாஹி ஜாமா பள்ளிவாசலில் ஆய்வுகள் நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது.