லக்னோ,
உத்தர பிரதேச மாநிலத்தில் உள்ள 9 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடத்தப்பட்ட நிலையில், தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டன. இதில் காசியாபாத், கெய்ர், புல்பூர் மற்றும் மஜவான் ஆகிய 4 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ள பா.ஜ.க., குண்டர்கி மற்றும் கதேஹரி ஆகிய 2 தொகுதிகளில் முன்னிலை வகித்து வருகிறது. பா.ஜ.க. கூட்டணியில் உள்ள ஆர்.எல்.டி. கட்சி மீராபூர் தொகுதியில் வெற்றி பெற்றுள்ளது. சமாஜ்வாடி கட்சி 2 தொகுதிகளை கைப்பற்றியுள்ளது.
இந்த நிலையில், உத்தர பிரதேசத்தில் நடந்த இடைத்தேதர்தலில் பிரதமர் மோடியின் தலைமையால் வெற்றி கிடைத்துள்ளது என அந்த மாநிலத்தின் முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் தெரிவித்துள்ளார். இது குறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்று ஜார்கண்ட் மற்றும் மராட்டிய மாநிலத்தின் சட்டமன்ற தேர்தல் முடிவுகளும், உத்தர பிரதேச இடைத்தேர்தல் முடிவுகளும் வெளியாகியுள்ளன. உத்தர பிரதேச இடைத்தேதர்தலில் பிரதமர் மோடியின் தலைமை மற்றும் தொலைநோக்கு பார்வையால் வெற்றி கிடைத்துள்ளது.
பிரதமர் மோடியின் கொள்கைகள் மீது மக்கள் தங்கள் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளனர். வெற்றி பெற்ற வேட்பாளர்களுக்கு வாழ்த்துகள். மராட்டிய மாநிலத்தில் 'மகாயுதி' கூட்டணி வரலாற்று வெற்றியை பதிவு செய்துள்ளது. இது சத்ரபதி சிவாஜியின் சித்தாந்தத்திற்கு கிடைத்த வெற்றியாகும். நாட்டு மக்கள் பிரதமர் மோடி மீது அசைக்க முடியாத நம்பிக்கை வைத்துள்ளனர்" என்று தெரிவித்தார்.