கோவை: ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணமடைந்ததையடுத்து அத்தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல் நடைபெற வாய்ப்பு உள்ளது. தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி முன்னாள் தலைவரும், ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவுமான ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவைத்தொடர்ந்து, ஒரு வாரத்திற்குள் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக முறைப்படி சட்டசபை செயலகம் அறிவிப்பு வெளியிடும். இதற்கான கடிதம் இந்திய தேர்தல் ஆணையத்திற்கு அனுப்பி வைக்கப்படும். இதையடுத்து 6 மாதத்திற்குள் இந்த தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது.
இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டால் ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்கள் கடந்த 4 ஆண்டுகளில் 3வது முறையாக வாக்களிக்க வேண்டிய சூழல் ஏற்படும். கடந்த 2021ல் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் சார்பில் ஈவிகேஎஸ் இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா போட்டியிட்டு வெற்றி பெற்றார். கடந்த 2023 ஜனவரி 4ம் தேதி மாரடைப்பு ஏற்பட்டு திருமகன் ஈவெரா உயிரிழந்தார். இதையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு நடைபெற்ற இடைத்தேர்தலில் ஈவிகேஎஸ்.இளங்கோவன் வெற்றி பெற்றார்.
இந்நிலையில் உடல் நலக்குறைவால் சிகிச்சை பெற்று வந்த அவர் நேற்று காலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இதனால், மீண்டும் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் நடத்த வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. அவ்வாறு இடைத்தேர்தல் நடந்தால் 4 ஆண்டுகளில் 3 முறையாக வாக்களிக்கும் நிலை ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு ஏற்பட்டுள்ளது. தமிழக சட்டசபை காலம் இன்னும் ஒன்றரை ஆண்டுகள் உள்ளது. ஒரு தொகுதி காலியானதாக அறிவித்தால் 6 மாதத்துக்குள் தேர்தல் நடத்த வேண்டும்.
இதனால் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடத்த வேண்டிய கட்டாயத்துக்கு தேர்தல் ஆணையம் தள்ளப்படும். அடுத்த சில நாட்களில் ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பை வெளியிடுவார். டெல்லி சட்டசபை தேர்தல் ஜனவரி இறுதியில் நடைபெற உள்ளது. இது தொடர்பான அறிவிப்பை இந்திய தேர்தல் ஆணையம் வெளியிடும் போது ஈரோடு கிழக்கு தொகுதிக்கான அறிவிப்பும் வெளியிடுவதற்கான வாய்ப்புகள் உள்ளதாக கூறப்படுகிறது.
The post ஈவிகேஎஸ்.இளங்கோவன் மறைவை தொடர்ந்து ஈரோடு கிழக்கு தொகுதிக்கு ஜனவரியில் இடைத்தேர்தல்? 3வது முறையாக ஓட்டு போட போகும் வாக்காளர்கள் appeared first on Dinakaran.