சென்னை: ஈவிகேஎஸ் இளங்கோவன் மறைவுக்கு அஞ்சலி செலுத்துகிற வகையில், ஒரு வாரம் துக்கம் அனுசரிப்பதோடு, தமிழகம் முழுவதும் காங்கிரஸ் கட்சியின் கொடிகள் அரைக்கம்பத்தில் பறக்க விடப்படும். அவரது உடல் பொதுமக்களின் அஞ்சலிக்காக சென்னை நந்தம்பாக்கம் அருகில், அவர் வாழ்ந்த மணப்பாக்கம் வீட்டில் இன்று (டிச.14) பிற்பகல் 2 மணி முதல் வைக்கப்படும். நாளை (டிச.15) ஞாயிற்றுக்கிழமை மாலை சுமார் 4 மணியளவில் முகலிவாக்கம் எல் அண்ட் டி காலனி பகுதியில் அமைந்துள்ள மின் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்படும், என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தலைவர் கு.செல்வப்பெருந்தகை தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது: தமிழ்நாடு காங்கிரஸ் தலைவராக இருமுறையும், மத்திய அமைச்சராகவும் மிகச் சிறப்பாக பணியாற்றிய ஈவிகேஎஸ் இளங்கோவன் உடல்நலக் குறைவு காரணமாக சென்னை மியாட் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி இன்று (டிச.14) காலை சுமார் 10.20 மணியளவில் காலமான செய்தி அறிந்து மிகுந்த அதிர்ச்சியும், துயரமும் அடைந்தேன்.