ஈரோடு: ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளராக அக்கட்சியின் கொள்கை பரப்பு இணைச் செயலாளர் வி.சி.சந்திரகுமார் போட்டியிடுவார் என திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலின் அறிவித்து உள்ளார். கடந்த 2021 சட்டமன்ற தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணியில் இடம் பெற்றிருந்த காங்கிரஸ் கட்சிக்கு ஈரோடு கிழக்கு தொகுதி ஒதுக்கப்பட்டிருந்தது. அதில், போட்டியிட்ட தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மகன் திருமகன் ஈவெரா, 1 லட்சத்து 50 ஆயிரத்து 491 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், கடந்த 2023 ஜனவரி 4ம் தேதி உடல் நலக்குறைவால் அவர் உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அதில், திமுக தலைமையிலான கூட்டணியில் மீண்டும் காங்கிரஸ் கட்சி போட்டியிட வாய்ப்பளிக்கப்பட்டது. அதன்படி, கடந்த 2023 பிப்ரவரி 27ம் தேதி நடைபெற்ற இடைத்தேர்தலில் மறைந்த திருமகன் ஈவெராவின் தந்தையும், தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் முன்னாள் தலைவருமான ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் போட்டியிட்டு 1 லட்சத்து 10 ஆயிரத்து 156 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். இந்நிலையில், அவர் கடந்த டிசம்பர் 14ம் தேதி உடல் நலக்குறைவால் உயிரிழந்தார். இதையடுத்து, ஈரோடு கிழக்குத் தொகுதிக்கு மீண்டும் இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி 5ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. அதைத் தொடர்ந்து, நேற்று வேட்புமனுத் தாக்கல் தொடங்கியது. 17ம் தேதி வேட்புமனுத் தாக்கலுக்கான இறுதி நாளாகும். 18ம் தேதி வேட்புமனுக்கள் பரிசீலிக்கப்பட்டு, 20ம் தேதி வேட்பாளர் பட்டியல் இறுதி செய்யப்படும். பிப்ரவரி 5ல் தேர்தல் நடைபெறும். 8ம் தேதி, சித்தோட்டில் உள்ள அரசினர் பொறியியல் கல்லூரியில் (ஐ.ஆர்.டி.டி.) வாக்கு எண்ணிக்கை நடைபெறும்.
இந்த நிலையில், திமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள காங்கிரஸ் கட்சிக்கே மீண்டும் ஈரோடு கிழக்கில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை கோரிக்கை விடுத்திருந்தார். ஈ.வி.கே.எஸ்.இளங்கோவனின் இளைய மகன் சஞ்சய் சம்பத் இத்தேர்தலில் போட்டியிட வாய்ப்பளிக்க வேண்டும் என ஈரோடு மாநகர் மாவட்ட காங்கிரஸ் சார்பிலும் தீர்மானம் நிறைவேற்றி கட்சித் தலைமைக்கு அனுப்பி வைக்கப்பட்டிருந்தது. அதனைத் தொடர்ந்து நடைபெற்ற பேச்சு வார்த்தையில், ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடும் என தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டித் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று இரவு அறிவித்தார். இதனால் ஈரோடு கிழக்குத் தொகுதியில் திமுக போட்டியிடுவது உறுதியானது. இந்த நிலையில், திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று வெளியிட்ட அறிக்கையில், ‘‘நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் காங்கிரஸ் கட்சியுடன் கலந்து பேசியதில், திமுக இத்தொகுதியில் போட்டியிடுவதாக முடிவு எடுக்கப்பட்டது. வரும் 5-2-2025ல் நடைபெற உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் திமுக தலைமையிலான கூட்டணி கட்சிகள் ஆதரவுடன் கழக வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் (கொள்கை பரப்பு இணைச்செயலாளர்) போட்டியிடுவார்’’ என அறிவித்தார்.
இதையடுத்து, முதல்வர் மு.க.ஸ்டாலினை முகாம் அலுவலகத்தில் வி.சந்திரகுமார் நேற்று சந்தித்து வாழ்த்து பெற்றார். அப்போது, அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, பொன்முடி, முத்துசாமி, திமுக விவசாய அணி இணை செயலாளர் குறிஞ்சி என்.சிவகுமார், ஈரோடு தெற்கு மாவட்ட துணை செயலாளர் செந்தில்குமார் ஆகியோர் உடனிருந்தனர். திமுக கொள்கை பரப்பு இணைச்செயலாளராக பொறுப்பு வகித்து வரும் வி.சி.சந்திரகுமார், 2019ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் சேலம் தொகுதி பொறுப்பாளராகவும், 2021ம் ஆண்டு சட்டமன்ற தேர்தலில் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராகவும், 2023ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்செங்கோடு தொகுதி பொறுப்பாளராகவும் பணியாற்றி வந்துள்ளார். எதிர்வரும் 2026 சட்டமன்ற தேர்தலிலும் குமாரபாளையம் தொகுதி பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு பொறுப்பு வகித்து வருகிறார். இது தவிர, அரவக்குறிச்சி, விக்கிரவாண்டி இடைத்தேர்தல்களிலும் தமிழ்நாடு முழுவதும் திமுகவின் அனைத்து பொதுக்கூட்டங்கள், கண்டன ஆர்ப்பாட்டங்களையும் ஏற்று செயல்பட்டு வந்துள்ளார்.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் திமுக வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் appeared first on Dinakaran.