சென்னை,
2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட திருமகன் ஈ.வெ.ரா. வெற்றி பெற்று எம்.எல்.ஏ.வானார். அவர் உடல்நலன் பாதிக்கப்பட்ட நிலையில் காலமானார். இதனையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் நடைபெற்றது. அந்த தேர்தலில் திருமகன் ஈ.வெ.ரா.வின் தந்தையும், மூத்த காங்கிரஸ் தலைவருமான ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் போட்டியிட்டு வென்றார். அண்மையில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் காலமானார்.
இதனையடுத்து 4 ஆண்டுகளில் 2-வது முறையாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் பிப்ரவரி 5-ந் தேதி நடைபெற உள்ளது. இத்தொகுதியில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 8-ந் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும். இந்த சூழலில் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வேட்பு மனுத் தாக்கல் கடந்த 1௦-ந் தேதி தொடங்கியது. வேட்பு மனுக்களைத் திரும்பப் பெற ஜனவரி 20-ந் தேதி கடைசி நாள் ஆகும்.
இந்த நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இந்த முறை தி.மு.க. போட்டியிடும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. வேட்பாளராக வி.சி. சந்திரகுமார் போட்டியிடுகிறார். ஈரோடு கிழக்கு தொகுதி தேர்தலில் பிரதான எதிர்க்கட்சியான அ.தி.மு.க. போட்டியிடாமல் புறக்கணிப்பதாக அறிவித்தது. மேலும் அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான தே.மு.தி.க.வும் புறக்கணித்தது. நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகமும் இத்தேர்தலில் போட்டியிடவில்லை. நாம் தமிழர் கட்சிக்கான வேட்பாளர் பொங்கலன்று அறிவிக்கப்படுவார் என்று அக்கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்திருந்தார்.
இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் தி.மு.க. வேட்பாளர் வி.சி. சந்திரகுமார் வரும் 17-ந் தேதி வேட்பு மனு தாக்கல் செய்கிறார்.
இதுதொடர்பாக அமைச்சர் முத்துசாமி கூறுகையில், "விதிமுறை மீறல்கள் இல்லாமல் தேர்தல் பணியாற்ற வேண்டும் என தி.மு.க.வினருக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. 2026 சட்டமன்ற தேர்தலுக்கு ஈரோடு இடைத்தேர்தல் அடித்தளமாக இருக்கும். இன்று மாலை 4 மணிக்கு வாக்கு சேகரிக்கும் பணி தொடங்கும்" என்று அவர் தெரிவித்தார்.