ஈரோடு: ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவடைந்தது. ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏ ஈவிகேஎஸ்.இளங்கோவன் மரணமடைந்ததால் அந்த தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிக்கப்பட்டது. அடுத்த மாதம் 5ம் தேதி வாக்குப்பதிவும், 8ம் தேதி வாக்கு எண்ணிக்கையும் நடக்கிறது. இதற்கான வேட்பு மனு தாக்கல், கடந்த 10ம் தேதி தொடங்கியது. இன்று வேட்பு தாக்கல் செய்ய கடைசி நாள் என்பதால் காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை ஏராளமானோர் வேட்புமனு தாக்கல் செய்தனர்.
அதிமுக, பாஜக, தேமுதிக, தவெக ஆகிய கட்சிகள் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலை புறக்கணித்துள்ளன. இந்தியா கூட்டணியின் திமுக வேட்பாளராக போட்டியிடும் வி.சி.சந்திரக்குமார் மாநகராட்சி அலுவலகத்திற்கு வந்து, தேர்தல் நடத்தும் அலுவலர் மனிஷிடம் வேட்பு மனுவை தாக்கல் செய்தார். இதேபோல், நாம் தமிழர் கட்சி வேட்பாளராக போட்டியிடும் சீதாலட்சுமியும் வேட்புமனு தாக்கல் செய்தார். ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் மொத்தம் 66 வேட்பு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
நாளை வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை நடக்கிறது. வேட்பு மனுக்களை 20ம் தேதிக்குள் வாபஸ் பெறலாம். அன்று மாலை 3 மணிக்கு இறுதி வேட்பாளர் பட்டியல் சின்னத்துடன் வெளியிடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
The post ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நிறைவு appeared first on Dinakaran.