ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தல் வருகிற பிப்ரவரி மாதம் 5ம் தேதி நடக்கிறது. இதில் திமுக தலைமையிலான கூட்டணியில் அக்கட்சியின் வேட்பாளராக வி.சி.சந்திரகுமார் அறிவிக்கப்பட்டுள்ளார். வேட்புமனுத் தாக்கலுக்கு 2 நாட்கள் மட்டுமே கால அவகாசம் உள்ள நிலையில், திமுக வேட்பாளர் சந்திரகுமார் வரும் 17ம் தேதி தனது வேட்புமனுவைத் தாக்கல் செய்யவுள்ளார். கடந்த இடைத்தேர்தலில் சுயேட்சை வேட்பாளர்கள் உள்பட 77 பேர் போட்டியிட்ட நிலையில், இந்த இடைத்தேர்தலில் போட்டியிட சுயேட்சை வேட்பாளர்கள்கூட ஆர்வம் காட்டாத நிலையே உள்ளது. கடந்த 10ம் தேதி தொடங்கிய வேட்புமனுத் தாக்கலின் முதல் நாளில் 3 சுயேட்சை வேட்பாளர்கள் மட்டுமே வேட்பு மனுத்தாக்கல் செய்தனர். முக்கிய கட்சிகளான அதிமுக, தேமுதிக ஆகிய கட்சிகள் இந்த தேர்தலை புறக்கணித்துள்ளன. பாஜ இந்த தேர்தலில் போட்டியிடும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் அந்த கட்சியும் போட்டியில்லை என நேற்று அறிவித்தது. தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் யாரும் போட்டியில்லை என அறிவித்து உள்ளனர். விக்கிரவாண்டி இடைத்தேர்தல் பாஜ கூட்டணியில் இருந்த பாமக போட்டியிட்டது. அதனால், இந்த இடைத்தேர்தல் கூட்டணியில் உள்ள தமாகாவை பாஜ போட்டியிட வைக்கலாம் என்று கூறப்பட்டது. கடந்த 2021 சட்டப்பேரவை தேர்தல் தேசிய ஜனநாயக கூட்டணியில் (அப்போது அதிமுகவும் இந்த கூட்டணியில் இருந்தது) தமாகா போட்டியிட்டது. இதனால் இந்த முறை தேசிய ஜனநாயக கூட்டணியில் தமாகா போட்டியிடும் என்று கூறப்பட்டது.
ஆனால் தேசிய ஜனநாயக கூட்டணி ஒட்டுமொத்தமாக இந்த தேர்தலை புறக்கணித்தது. இதன் காரணமாக ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் முக்கிய கட்சிகள் பின்வாங்கியுள்ளன. நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் தங்கள் கட்சி இடைத்தேர்தலில் போட்டியிடும் என தெரிவித்துள்ளார். பொங்கல் அன்று வேட்பாளரை அறிவிக்க போவதாக தெரிவித்து உள்ளார். ஒருவேளை அவர் வேட்பாளரை அறிவித்தால் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலில் திமுக, நாம் தமிழர் இடையிலான இருமுனை போட்டியே நிலவும். கடந்த சில நாட்களாக தந்தை பெரியார் குறித்து சீமான் தெரிவித்த கருத்துகள் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்துள்ளன. அவருக்கு எதிராக பெரியாரிய அமைப்பினர் பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தினர். இதுதொடர்பாக தமிழ்நாடு முழுவதும் அளிக்கப்பட்ட புகார் தொடர்பாக 70க்கும் மேற்பட்ட வழக்குகள் சீமான் மீது பதியப்பட்டுள்ளது.
இந்த விவகாரம் தொடர்பாக சீமான் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிடக்கோரி தொடர்ந்த வழக்கில், அவதூறு கருத்துகள் சமூகத்தில் பதற்றத்தை உருவாக்குகிறது. எனவே சீமான் மீது விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஐகோர்ட் கிளை அதிரடியாக உத்தரவிட்டது. இதையடுத்து சீமானை கைது செய்வது தொடர்பாக போலீசார் சட்ட வல்லுநர்களுடன் ஆலோசனை நடத்தி வருகிறார். இந்த நிலையில் நேற்று மீண்டும் பெரியாரை விமர்சித்து சீமான் கருத்து தெரிவித்துள்ளார். இது அவர் மீது மேலும் ஆத்திரத்தை ஏற்படுத்தியுள்ளது. தற்போது தேர்தல் நடக்க உள்ள ஈரோடு கிழக்கு தொகுதி பெரியார் பிறந்த மண். அந்த தொகுதியில் வேட்பாளரை அறிவித்து எப்படி சீமான் ஓட்டு கேட்டு வந்த நிற்க போகிறார் என்பது கேள்விக்குறியாக உள்ளது. அப்படிப்பட்ட நிலையில் இந்த தொகுதியில் அவருக்கு எந்த வகையில் ஆதரவு கிடைக்கும்? என்பது தெரியவில்லை. எனவே அவர் ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலை சந்திப்பாரா? எனும் சந்தேகமும் ஏற்பட்டுள்ளது.
The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை முக்கிய கட்சிகள் புறக்கணிப்பு appeared first on Dinakaran.