ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு: முதல்வர், துணை முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு

3 months ago 9


சென்னை: ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் வெற்றிபெற்ற திமுக உறுப்பினர் வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக நேற்று பதவியேற்றுக்கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவிப்பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின், துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்றனர். ஈரோடு கிழக்கு தொகுதி எம்எல்ஏவாக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் மறைவையொட்டி அந்த தொகுதி காலியானதாக அறிவிக்கப்பட்டது. இதையடுத்து ஈரோடு கிழக்கு சட்டப்பேரவை தொகுதிக்கான இடைத்தேர்தல் கடந்த 5ம் தேதி நடந்து முடிந்தது.

வாக்கு எண்ணிக்கை கடந்த 8ம்தேதி நடந்தது. இதில், திமுகவை சேர்ந்த வேட்பாளர் வி.சி.சந்திரகுமார் 1,14,439 வாக்குகளை பெற்றார். அவரை எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி 23,810 வாக்குகள் பெற்றார். நோட்டாவுக்கு 5 ஆயிரத்திற்கு மேற்பட்ட வாக்குகள் கிடைத்தன. இதனால், 90,629 வாக்குகள் வித்தியாசத்தில் தி.மு.க. வேட்பாளர் வெற்றி பெற்றார் என அறிவிக்கப்பட்டார். இந்த தேர்தலில் திமுக வேட்பாளரை தவிர எதிர்த்து போட்டியிட்ட நாம் தமிழர் கட்சி உள்ளிட்ட 45 வேட்பாளர்களும் டெபாசிட் இழந்தனர்.

இந்நிலையில், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் சட்டப்பேரவை உறுப்பினராக சென்னை தலைமை செயலகத்தில் நேற்று பதவியேற்று கொண்டார். அவருக்கு சபாநாயகர் அப்பாவு பதவி பிரமாணம் செய்து வைத்தார். முதல்வர் மு.க.ஸ்டாலின் மற்றும் துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் முன்னிலையில் நடந்த இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் துரைமுருகன், கே.என்.நேரு, எ.வ.வேலு உள்ளிட்டோரும் பங்கேற்றனர். கூட்டணி கட்சிகளை சேர்ந்த செல்வப்பெருந்தகை, வைகோ, திருமாவளவன், முத்தரசன், சண்முகம், கொங்குநாடு ஈஸ்வரன் உள்ளிட்ட தலைவர்களும் பங்கேற்றனர்.

The post ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் வெற்றி பெற்ற வி.சி.சந்திரகுமார் எம்எல்ஏவாக பதவியேற்பு: முதல்வர், துணை முதல்வர், கூட்டணி கட்சி தலைவர்கள் பங்கேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article