சென்னை,
சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று நடைபெற்ற நிகழ்ச்சியில் நாம் தமிழர் மாவட்ட செயலாளர்கள் 8 பேர் உள்பட 2,000 பேர் மற்றும் பிற கட்சியினரை சேர்ந்த 1,000 பேர் என மொத்தம் 3,000 பேர் முதல்-அமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின் முன்னிலையில் தி.மு.க.வில் இணைந்தனர்.
நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியவர்கள், தி.மு.க.வில் இணையும் விழாவில் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு நினைவுப் பரிசாக பெரியார் சிலையை வழங்கினர். இந்நிலையில், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது;-
"தி.மு.க.வில் இணைந்தவர்களுக்கு வாழ்த்துகள். தி.மு.க.வையும் சேர்த்து நாங்கள்தான் வளர்க்க வேண்டியுள்ளது. பெரியார் ஒழிக என்பது எங்கள் கோட்பாடு கிடையாது. பெரியாரை எதிர்த்து பேசிதான் திராவிடர் கழகத்தில் இருந்து அண்ணா வெளியே வந்தார். அதன் பிறகு பெரியாரைப் பற்றி கருணாநிதி விமர்சித்து பேசியதை விட நாங்கள் ஒரு துளி கூட பேசவில்லை.
மதுரை டங்ஸ்டன் சுரங்க ஏலம் ரத்து செய்யப்பட்டது, மக்களின் தன்னெழுச்சியான பேரெதிர்ப்புக்கும், புரட்சிகர போராட்டத்திற்கும் கிடைத்த வெற்றி. இதில் யாரும் சொந்தம் கொண்டாட முடியாது.
தேர்தலில் பெரியாரைப் பற்றி பேசி ஓட்டு கேட்க வேண்டும். காந்தி படத்தை காட்டி ஓட்டு கேட்க கூடாது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் சூரியன் மறைந்தால்தான் தமிழ் சமூகத்திற்கு விடிவு கிடைக்கும்."
இவ்வாறு சீமான் தெரிவித்தார்.