*நடவுப்பணியில் விவசாயிகள் தீவிரம்
ஈரோடு : ஈரோடு காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.பவானிசாகர் அணை மூலம் காலிங்கராயன் வாய்க்கால் பாசனத்தில், சுமார் 15 ஆயிரம் ஏக்கர் விளைநிலம் பாசன வசதி பெறுகிறது.
தற்போது பெரும்பாலான பகுதிகளில் முதற்கட்ட நெல் அறுவடை நிறைவு பெற்றுள்ளது. இதனையடுத்து, பவானி கோணவாய்க்கால், ஆர்.என்.புதூர், சுண்ணாம்பு ஓடை, பி.பெ.அக்ரஹாரம், வைரபாளையம், கருங்கல்பாளையம், கிருஷ்ணம்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில், உழவுப் பணி மற்றும் நாற்று நடவுப் பணியில் விவசாயிகள் ஈடுபட்டு வருகின்றனர். இதுகுறித்து விவசாயிகள் கூறியதாவது :
கடந்தாண்டு நல்ல மழை பெய்ததால், பவானிசாகர் அணையில் போதிய அளவில் நீர் உள்ளது. இதனால், தமிழ்நாடு அரசு தாமதமின்றி தண்ணீரை திறந்திருக்கிறது. தை மாத துவக்கத்திலேயே முதல் போக விளைச்சல் முடிந்தது. தற்போது இரண்டாம் போக விவசாயப் பணி தொடங்கப்பட்டுள்ளது. குறுகிய கால பயிரான பிபிடி, பொன்னி ரகம் அதிக அளவில் நடவு செய்யப்பட்டுள்ளது.
இவை தவிர, பாசூர் பகுதிகளில் சுமார் 2 ஆயிரத்துக்கு மேற்பட்ட ஏக்கரில் கரும்பும், மூலக்கரை, வெண்டிபாளையம் பகுதிகளில் வாழையும் போடப்பட்டுள்ளது. கொடுமுடி உள்ளிட்ட சில பகுதிகளில் மஞ்சள் பயிரிடப்பட்டுள்ளது. ஏப்ரல் மாதத்துடன் தண்ணீர் நிறுத்தப்பட்டு விடும். இவ்வாறு விவசாயிகள் தெரிவித்தனர்.
The post ஈரோடு காலிங்கராயன் பாசனத்தில் இரண்டாம் போக நெல் சாகுபடி appeared first on Dinakaran.