![](https://media.dailythanthi.com/h-upload/2025/01/27/36036162-chennai-12.webp)
ஈரோடு,
ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வருகிற 5-ந்தேதி நடைபெற உள்ளது. தி.மு.க., நாம் தமிழர் கட்சி வேட்பாளர் உள்பட 46 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். தேர்தலை முன்னிட்டு மாவட்ட தேர்தல் அதிகாரியும், கலெக்டருமான ராஜகோபால் சுன்கரா தலைமையில் பல்வேறு முன்னேற்பாடு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
அதன்படி மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் கணினி சுழற்சி முறையில் ஒதுக்கீடு செய்யும் பணி, வாக்குச்சாவடிகள் தயார்படுத்தும் பணி உள்ளிட்ட பல்வேறு பணிகள் நடைபெறுகிறது. இதேபோல் தேர்தலில் வாக்குச்சாவடிகளில் பணியாற்ற உள்ள அலுவலர்களுக்கு பணி ஒதுக்கீடு செய்யப்பட்டு அவர்களுக்கு பயிற்சி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில், தேர்தலுக்கு இன்னும் குறைவான நாட்களே உள்ளதால் தற்போது ஈரோடு கிழக்கு தொகுதி வாக்காளர்களுக்கு அங்கன்வாடி மற்றும் மாநகராட்சி ஊழியர்கள் சார்பாக 'பூத்' சிலிப் வழங்கும் பணி தொடங்கியுள்ளது. இவர்கள் ஒவ்வொரு வார்டிலும் உள்ள வாக்காளர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று அவர்களது வாக்காளர் அடையாள அட்டையை பரிசோதனை செய்து வாக்களிக்க செல்லும்போது எடுத்து செல்ல வேண்டிய 'பூத்' சிலிப்பை வழங்கி வருகின்றனர். பூத் சிலிப் வழங்கும் பணி வருகிற 1-ம் தேதிக்குள் முடிவடையும் என கூறப்படுகிறது. பூத் ஸ்லிப் வழங்கும் பணியில் வாக்குச்சாவடி அலுவலர்கள் உள்ளிட்ட 200 பேர் ஈடுபட்டுள்ளனர்.