
டெல்லி,
காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் தி ரெசிஸ்டண்ட் பிரண்ட்' பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது.
இந்த தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மீது இந்தியா நேற்று ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 31 பேர் உயிரிழந்ததாக பாகிஸ்தான் ராணுவம் தெரிவித்துள்ளது. இதனால், இந்தியா, பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் நிலவுகிறது.
இந்நிலையில், போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் ஆர்சி இன்று இந்தியா வந்துள்ளார். டெல்லி விமான நிலையம் வந்த அவர் வெளியுறவுத்துறை மந்திரி ஜெய்சங்கரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
நேற்று முன் தினம் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரி சயது அப்பாஸ் பாகிஸ்தான் சென்றிருந்தார். அவர் பாகிஸ்தான் ராணுவ தளபதி சயது அசீம் முனீரை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தி இருந்தார். அதன்பின்னர், பாகிஸ்தானில் இருந்து ஈரான் சென்ற அப்பாஸ் அங்கிருந்து விமானம் மூலம் இந்தியா வந்துள்ளார். போர் பதற்றத்திற்கு மத்தியில் ஈரான் வெளியுறவுத்துறை மந்திரியின் இந்திய பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.