ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல்; உலகிற்கு பேரழிவை ஏற்படுத்தும் - ஐ.நா. கவலை

2 weeks ago 5

நியூயார்க்,

காசா மீது இஸ்ரேல் ஓராண்டுக்கும் மேலாக போர் தொடுத்து வரும் சூழலில், பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் ஈரான் ராணுவம் கடந்த ஆண்டு அக்டோபரில் இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட ஏவுகணைகளை வீசி தாக்குதல் நடத்தியது. அதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்தது.

இதன்பின்னர் இரு நாடுகளுக்கு இடையே போர் பதற்றம் தணிந்திருந்த சூழலில், திடீரென 'ஆபரேஷன் ரைசிங் லயன்' என்ற பெயரில் ஈரான் மீது கடந்த 13-ந்தேதி இஸ்ரேல் தாக்குதல் நடத்தியது. இதனை தொடர்ந்து இஸ்ரேல் மீது ஈரான் பதிலடி தாக்குதல் நடத்தி வருகிறது. இதனால் மத்திய கிழக்கு பிராந்தியத்தில் போர் பதற்றம் அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், இஸ்ரேலுக்கு ஆதரவாக அமெரிக்காவும் போரில் இறங்கியுள்ளது. ஈரானின் பர்தவ், நடான்ஸ் மற்றும் எஸ்பஹான் ஆகிய 3 அணு உலைகள் மீது அமெரிக்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் தெரிவித்துள்ளார். இஸ்ரேல்-ஈரான் இடையிலான போரில் அமெரிக்கா தலையிட்டு தாக்குதல் நடத்தியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதனிடையே, ஈரான் மீது அமெரிக்கா தாக்குதல் நடத்தியது குறித்து ஐ.நா. கவலை தெரிவித்துள்ளது. இது தொடர்பாக ஐ.நா. சபை பொதுச்செயலாளர் அன்டோனியோ குட்டெரெஸ் 'எக்ஸ்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "இன்று ஈரானுக்கு எதிராக அமெரிக்கா தனது ராணுவ பலத்தை பயன்படுத்தியிருப்பது மிகவும் கவலையளிக்கிறது. ஏற்கனவே போரின் விளிம்பில் இருக்கும் ஒரு பிராந்தியத்தில் இது மிகவும் ஆபத்தான நடவடிக்கையாகும். மேலும் சர்வதேச அமைதி மற்றும் பாதுகாப்பிற்கு நேரடி அச்சுறுத்தலாகும்.

இந்த மோதல் விரைவில் கட்டுப்பாட்டை இழக்கும் அபாயம் அதிகரித்து வருகிறது. இது பொதுமக்கள், மத்திய கிழக்கு பிராந்தியம் மற்றும் உலகிற்கு பேரழிவு தரும் விளைவுகளை ஏற்படுத்தும்.

ஐ.நா. சபையின் சாசனம் மற்றும் சர்வதேச சட்ட விதிகளின் கீழ், ஐ.நா. உறுப்பு நாடுகள் தங்கள் கடமைகளை நிலைநிறுத்தவும், போர் பதற்றத்தை தணிக்கவும் முன்வர வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இந்த ஆபத்தான நேரத்தில், மேலும் குழப்பம் ஏற்படுவதை தவிர்ப்பது மிகவும் முக்கியம். ராணுவ நடவடிக்கை எதற்கும் தீர்வு இல்லை. பேச்சுவார்த்தை மட்டுமே முன்னோக்கி செல்லும் ஒரே வழி. அமைதி மட்டுமே ஒரே நம்பிக்கை." என்று தெரிவித்துள்ளார். 

I am gravely alarmed by the use of force by the United States against Iran today. This is a dangerous escalation in a region already on the edge – and a direct threat to international peace and security. There is a growing risk that this conflict could rapidly get out of…

— António Guterres (@antonioguterres) June 22, 2025
Read Entire Article