ஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும்; இந்தியர்களுக்கு மத்திய அரசு வலியுறுத்தல்

2 hours ago 3

புதுடெல்லி,

இஸ்ரேலுக்கு எதிராக ஹமாஸ் அமைப்பு தாக்குதல் நடத்தி ஓராண்டு ஆகவுள்ள சூழலில், இஸ்ரேலும் தொடர்ந்து காசாவை இலக்காக கொண்டு போரில் ஈடுபட்டு வருகிறது. இதில், 43 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாலஸ்தீன மக்கள் உயிரிழந்து உள்ளனர். இந்த சூழலில், பாலஸ்தீனர்களுக்கு ஆதரவாக ஹிஸ்புல்லா அமைப்பு செயல்பட்டு வருகிறது.

லெபனானில் இருந்தபடி இஸ்ரேலை இலக்காக கொண்டு தாக்குதலை தொடுத்து வருகிறது. இதற்கு இஸ்ரேலும் பதிலடி கொடுத்து வருகிறது. இதில் அந்த அமைப்பின் பல முக்கிய தலைவர்கள் கொல்லப்பட்டனர். இந்த சூழலில், அந்த அமைப்புக்கு ஆதரவாக ஈரானும் இணைந்து கொண்டது. இஸ்ரேல் மீது 200-க்கும் மேற்பட்ட பாலிஸ்டிக் ரக ஏவுகணைகளை நேற்று வீசி தாக்குதல் நடத்தி உள்ளது.

எனினும், அவற்றில் பல ஏவுகணைகளை வழியிலேயே தடுத்து, அழித்து விட்டோம் என இஸ்ரேல் கூறியது. இந்நிலையில், இஸ்ரேலின் 2 ராணுவ தளங்களை இலக்காக கொண்டும் ஈரான் தாக்குதல் நடத்தி உள்ளது. நிவேதிம் விமான தளம், நெட்ஜரிம் ராணுவ தளம் மற்றும் டெல் நாப் உளவு பிரிவு ஆகியவற்றின் மீது நேற்றிரவு தாக்குதல் நடத்தப்பட்டது.

ஆபரேசன் ட்ரூ பிராமிஸ் 2 என்ற பெயரில் ஈரான் நடத்திய இந்த தாக்குதலுக்கு தக்க பதிலடி கொடுக்கப்படும் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்து உள்ளார். இந்த சூழலில், ஈரானில் நிலவும் பாதுகாப்பு நிலைமை பற்றி தொடர்ந்து கவனித்து வருகிறோம் என மத்திய அரசு தெரிவித்து உள்ளது.

இதனையடுத்து, ஈரானுக்கு பயணம் மேற்கொள்வது தவிர்க்கப்பட வேண்டும் என இந்தியர்களை மத்திய அரசு வலியுறுத்தி உள்ளது. மத்திய கிழக்கு பகுதியில் பதற்றம் ஏற்பட்டு உள்ள சூழலில், இந்தியர்கள் யாரும் ஈரானுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தி உள்ளது. இஸ்ரேலில் உள்ள இந்திய மக்கள் எச்சரிக்கையுடன் இருக்கும்படியும் இந்தியா கேட்டு கொண்டுள்ளது.

Read Entire Article