ஈராக்கில் அமெரிக்க ராணுவம் இருப்பது சட்டவிரோதம் - ஈரான் மத தலைவர் குற்றச்சாட்டு

4 hours ago 2

டெஹ்ரான்,

பயங்கரவாத ஒழிப்பு நடவடிக்கை என்ற பெயரில் ஈராக்கில் அமெரிக்க படைகள் பல ஆண்டுகளாக முகாமிட்டுள்ளன. தங்கள் நாட்டில் இருந்து வெளியேறுமாறு ஈராக் அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறபோதும், அமெரிக்கா தனது படைகளை அங்கு நிறுத்தியுள்ளது.

இந்த நிலையில் அரசு முறை பயணமாக நேற்று முன்தினம் ஈரானுக்கு சென்ற ஈராக் நாட்டின் பிரதமர் முகமது ஷியா அல் சூடானி, தலைநகர் டெஹ்ரானில் ஈரானின் மூத்த மத தலைவர் அயதுல்லா அலி கமேனியை சந்தித்து பேசினார். இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவது குறித்தும், மத்திய கிழக்கின் சமீபத்திய முன்னேற்றங்கள், குறிப்பாக சிரியாவின் சூழ்நிலைகள் குறித்தும் இரு நாட்டு தலைவர்களும் தீவிரமாக ஆலோசித்தனர்.

அப்போது பேசிய அயதுல்லா அலி கமேனி "ஈராக்கில் அமெரிக்க ராணுவத்தின் இருப்பு முற்றிலும் சட்டவிரோதமானது. இதற்கு எதிராக அரபு நாடுகள் ஓரணியில் திரள வேண்டும். ஈராக்கில் தங்கள் இருப்பை ஒருங்கிணைக்கவும், விரிவுபடுத்தவும் அமெரிக்கர்கள் முயற்சிகளை மேற்கொள்வதற்கான சான்றுகள் உள்ளன. இந்த ஆக்கிரமிப்பை கடுமையாக எதிர்த்து நிற்க வேண்டும்" என தெரிவித்தார்.

அதன் பின்னர் பேசிய ஈராக் பிரதமர் சூடானி காசா மற்றும் லெபனானுக்கு எதிரான இஸ்ரேலின் ஆக்கிரமிப்புகளை கடுமையாக கண்டித்தார். மேலும் காசா மற்றும் லெபனான் மக்களுக்கு ஆதரவளிக்கும் தனது நாட்டின் கொள்கை ரீதியான நிலைப்பாட்டை அவர் சுட்டிக் காட்டினார்.

Read Entire Article