இஸ்ரேல் தொடர் தாக்குதல்; ஹிஜ்புல்லா அமைப்பின் மற்றொரு தளபதி படுகொலை

2 months ago 23

டெல் அவிவ்,

இஸ்ரேல் மீது கடந்த 2023-ம் ஆண்டு அக்டோபர் 7-ந்தேதி ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு தாக்குதல் நடத்தியதில் அந்நாடு கடுமையாக பாதிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானோரை கொன்று குவித்தும், நூற்றுக்கணக்கானோரை பணய கைதிகளாக சிறை பிடித்தும் சென்றது.

எனினும், போர்நிறுத்த ஒப்பந்தம் அடிப்படையில், அவர்களில் சிலரை இஸ்ரேல் மீட்டது. மீதமுள்ளவர்களையும் மீட்போம் என சூளுரைத்தது. ஹமாஸ் அமைப்பை ஒழிக்கும் வரை ஓயமாட்டோம் என இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு சபதம் எடுத்துள்ளார். இதற்காக தொடர்ந்து காசா மீது இஸ்ரேல் போரில் ஈடுபட்டு வருகிறது.

பல மாதங்களாக நடந்து வரும் மோதலில் 43 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் காசா பகுதியில் உயிரிழந்து உள்ளனர். பல்லாயிரக்கணக்கானோர் காயமடைந்து உள்ளனர் என்று காசா சுகாதார அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர்.

பாலஸ்தீனியர்களுக்கு ஆதரவாக, ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பும் போரில் ஈடுபட்டு வருகிறது. இஸ்ரேலை தாக்கி வருகிறது. இதன் தொடர்ச்சியாக, இஸ்ரேல் பதிலடி தாக்குதலில் ஈடுபட்டது. இதில், அடுத்தடுத்து பலர் கொலை செய்யப்பட்டனர். ஹமாஸ் அமைப்பின் தலைவரான இஸ்மாயில் ஹனியே கொல்லப்பட்டார். அடுத்து, ஹிஜ்புல்லா அமைப்பின் தளபதி புவாத் ஷுகர் என்பவரை இஸ்ரேல் தாக்கி படுகொலை செய்தது

இந்நிலையில், ஹிஜ்புல்லா அமைப்பின் தலைவரான ஹசன் நஸ்ரல்லாவை பெய்ரூட் நகரில் வைத்து இஸ்ரேல் ராணுவம் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தி கொலை செய்தது. எனினும், இந்த தாக்குதலில் பொதுமக்களில் 6 பேர் உயிரிழந்து விட்டனர். 20-க்கும் மேற்பட்டோர் காயமடைந்து உள்ளனர் என லெபனானின் சுகாதார அமைச்சகம் தெரிவித்து இருந்தது.

இதனை ஹிஜ்புல்லா அமைப்பும் நேற்று உறுதி செய்துள்ளது. பாலஸ்தீனத்திற்கு ஆதரவாகவும், எதிரிக்கு எதிரான புனித போரை தொடர்ந்து மேற்கொள்வோம் என அந்த அமைப்பு உறுதிமொழி எடுத்துள்ளது.

இந்த சூழலில், இஸ்ரேல் ராணுவம் இன்று வெளியிட்ட எக்ஸ் சமூக ஊடக பதிவில், ஹிஜ்புல்லா அமைப்பின் தடுப்பு காவல் பிரிவின் தளபதி மற்றும் அவர்களுடைய செயற்குழுவின் உறுப்பினரான நபில் குவாவக் என்பவர் இஸ்ரேல் பாதுகாப்பு படையின் துல்லிய தாக்குதலில் கொல்லப்பட்டு விட்டார் என தெரிவித்து உள்ளது.

ஹிஜ்புல்லா அமைப்பின் மூத்த தளபதிகளுடன் அவர் நெருங்கிய தொடர்பில் இருந்ததுடன், இஸ்ரேல் மற்றும் அதன் குடிமக்களுக்கு எதிரான பயங்கரவாத தாக்குதல்களை நடத்துவதில் நேரடியாக ஈடுபட்டவர் என்றும் தெரிவித்து உள்ளது.

1980-ம் ஆண்டு காலகட்டத்தில் ஹிஜ்புல்லா அமைப்பில் இணைந்த அவர், அவருடைய துறையில் நிபுணத்துவம் பெற்ற முக்கிய நபராக அறியப்பட்டார். தெற்கு பகுதிக்கான துணை தளபதியாகவும் செயல்பட்டு வந்துள்ளார் என தெரிவிக்கப்பட்டு உள்ளது.

தொடர்ந்து ராணுவம் வெளியிட்ட செய்தியில், ஹிஜ்புல்லா பயங்கரவாத அமைப்பில் உள்ள தளபதிகளை கொல்வதற்காக தொடர்ந்து தாக்குதல் நடத்தப்படும். இஸ்ரேல் மக்களுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் யாருக்கு எதிராகவும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தெரிவித்து உள்ளது.

ELIMINATED: The Commander of Hezbollah's Preventative Security Unit and a member of their Executive Council, Nabil Qaouk, was eliminated in a precise IDF strike.Qaouk was close to Hezbollah's senior commanders and was directly engaged in terrorist attacks against the State of… pic.twitter.com/dcvKLRkMbf

— Israel Defense Forces (@IDF) September 29, 2024
Read Entire Article