இஸ்ரேல் தாக்குதலை தொடர்ந்து ஈரானில் விமான போக்குவரத்து மீண்டும் தொடக்கம்

2 months ago 13

தெஹ்ரான்,

இஸ்ரேல் மீது கடந்த 1-ந்தேதி ஈரான் மிகப்பெரிய அளவில் ஏவுகணை தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் தற்காப்புக்காக நடத்தப்பட்டதாக ஈரான் கூறியது. சுமார் 180 பாலிஸ்டிக் ஏவுகணைகள் இஸ்ரேல் மீது ஏவப்பட்டன. இஸ்ரேலில் உள்ள ராணுவ முகாம்களை குறிவைத்து தாக்குதல் நடத்தியதாக ஈரான் ராணுவம் தெரிவித்தது.

இருப்பினும் இதில் பெரும்பாலான ஏவுகணைகள் இஸ்ரேலின் ஏவுகணை தடுப்பு அமைப்பின் மூலம் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டதாக இஸ்ரேல் ராணுவம் கூறியது. அதே சமயம், இந்த தாக்குதலுக்கு நிச்சயம் பதிலடி கொடுப்போம் எனவும் இஸ்ரேல் அரசு தெரிவித்திருந்தது.

இந்த சூழலில், ஈரானின் தலைநகர் தெஹ்ரானுக்கு அருகே உள்ள ராணுவ இலக்குகளை குறிவைத்து இஸ்ரேல் பாதுகாப்பு படை இன்று அதிகாலை அதிரடி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதல் காரணமாக ஈரான் நாட்டில் விமான போக்குவரத்து நிறுத்தப்பட்டு, வான் வழியும் தற்காலிகமாக மூடப்பட்டது.

இந்த தாக்குதலால் தங்களுக்கு பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை என ஈரான் கூறியுள்ளது. அதேசமயம், 2 ஈரான் ராணுவ வீரர்கள் உயிரிழந்ததாகவும் தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிலையில், ஈரானில் விமான போக்குவரத்து மீண்டும் தொடங்கியுள்ளது. இன்று காலை 9 மணியில் இருந்து ஈரானில் விமான சேவைகள் வழக்கம்போல் இயங்க தொடங்கியதாக அந்நாட்டின் சிவில் விமான போக்குவரத்து துறை செய்தி தொடர்பாளர் ஜாபர் யாசர்லு தெரிவித்துள்ளார்.

Read Entire Article