இளையோர் டெஸ்ட்: இங்கிலாந்து அணிக்கு வலுவான இலக்கு நிர்ணயித்த இந்தியா

6 hours ago 1

பெக்கன்ஹாம்,

இந்தியா -இங்கிலாந்து ஜூனியர் கிரிக்கெட் (19 வயதுக்குட்பட்டோர்) அணிகளுக்கு இடையிலான முதல் டெஸ்ட் போட்டி பெக்கன்ஹாமில் நடைபெற்று வருகிறது. இதில் டாஸ் வென்று பேட்டிங் செய்த இந்திய அணி முதல் இன்னிங்சில் 112.5 ஓவர்களில் 540 ரன்கள் குவித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ஆயுஷ் மாத்ரே 102 ரன்கள் அடித்தார். இங்கிலாந்து தரப்பில் அலெக்ஸ் கிரீன் மற்றும் ரால்பி ஆல்பர்ட் தலா 3 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.

இதனையடுத்து முதல் இன்னிங்சை தொடங்கிய இங்கிலாந்து அணி 114.5 ஓவர்களில் 439 ரன்கள் அடித்த நிலையில் ஆல் அவுட் ஆனது. அதிகபட்சமாக ராக்கி பிளிண்டாப் 93 ரன்களிலும், ஹம்சா ஷேக் 84 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். இந்தியா தரப்பில் அதிகபட்சமாக ஹெனில் படேல் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

பின்னர் 101 ரன்கள் முன்னிலையுடன் 2-வது இன்னிங்சை தொடங்கிய இந்திய அணிக்கு தொடக்க ஆட்டக்காரர்கள் ஆன சூர்யவன்ஷி - ஆயுஷ் மாத்ரே நல்ல அடித்தளம் அமைத்து கொடுத்தனர். அதிரடியாக விளையாடிய சூர்யவன்ஷி 56 ரன்களிலும், ஆயுஷ் மாத்ரே 32 ரன்களிலும் ஆட்டமிழந்தனர். அடுத்து வந்த சாவ்டா 3 ரன்களில் ஆட்டமிழந்தார்.

3-வது நாள் முடிவில் இந்திய அணி 3 விக்கெட்டுகளை இழந்து 128 ரன்கள் அடித்து மொத்தம் 229 ரன்கள் முன்னிலை பெற்றிருந்தது. விஹான் மல்ஹோத்ரா 34 ரன்களுடனும், அபிக்யான் குண்டு ரன் எதுவுமின்றியும் களத்தில் இருந்தனர். இங்கிலாந்து தரப்பில் ஆர்ச்சி வாகன் 3 விக்கெட்டுகள் வீழ்த்தி இருந்தார்.

இத்தகைய சூழலில் 4-வது நாள் ஆட்டம் இன்று தொடங்கியது. தொடர்ந்து பேட்டிங் செய்த இந்திய அணிக்கு விஹான் மல்ஹோத்ரா மட்டும் நிலைத்து விளையாட மற்ற வீரர்கள் விரைவில் ஆட்டமிழந்து வெளியேறினர். ஆர்ச்சி வாகன் சிறப்பாக பந்துவீசி இந்திய அணியின் விக்கெட்டுகளை வீழ்த்தினார். நிலைத்து விளையாடிய விஹான் 63 ரன்களில் ஆட்டமிழந்தார். இறுதி கட்டத்தில் ஆர்.எஸ். அம்ப்ரிஷ் பொறுப்புடன் விளையாடி 53 ரன்கள் அடித்த நிலையில் கடைசி விக்கெட்டாக ரன் அவுட் ஆனார்.

2-வது இன்னிங்சில் 57.4 ஓவர்கள் தாக்குப்பிடித்த இந்திய அணி 248 ரன்களில் ஆல் அவுட் ஆனது. இதன் மூலம் இங்கிலாந்து அணிக்கு 350 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்து தரப்பில் அற்புதமாக பந்துவீசிய ஆர்ச்சி வாகன் 6 விக்கெட்டுகளை அள்ளினார்.

இதனையடுத்து 350 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற வலுவான இலக்கை நோக்கி இங்கிலாந்து களமிறங்க உள்ளது.

Read Entire Article