இளம் வயது கருப்பை நீக்கம்!

2 hours ago 1

நன்றி குங்குமம் தோழி

சமீபத்தில் கருப்பை நீக்க அறுவை சிகிச்சை செய்துகொண்ட ெபண் ஒருவர் உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள என்னிடம் வந்திருந்தார். அவருக்கு வயது முப்பத்தைந்து. கட்டாயத் தேவை ஏற்பட்டதால் அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய சூழல் உருவானது. அவருக்கு இளம் வயதில் கருப்பையை நீக்கிவிட்டால் எதிர்காலத்தில் என்னென்ன பாதிப்புகள் எளிதில் வரலாம் என்ற விழிப்புணர்வு இருந்ததால், முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக உடற்பயிற்சிகள் கற்றுக்கொள்ள வந்திருந்தார். கருப்பை அறுவை சிகிச்சை குறித்து சில பெண்களுக்கு மட்டுமே விழிப்புணர்வு உள்ளது. அதனைப் பற்றி அனைத்து பெண்களும் தெரிந்து கொள்வது அவசியம்.

கருப்பை அறுவை சிகிச்சை…

குழந்தை பிறந்த பின்பும் கர்ப்பப்பை என்பது அனைத்து பெண்களுக்கும் முக்கியமான ஒன்று. பெண்களின் கவசம் போல இருப்பது இந்த கர்ப்பப்பை மற்றும் அதன் உடன் உறுப்புகளான கருப்பை வாய், கருமுட்டை பை என எல்லாம். கருமுட்டை பையில் இருந்து சுரக்கும் ஹார்மோன்கள் பெண்களை பல்வேறு வழிகளில் காக்கிறது. அதனால்தான் அறுவை சிகிச்சை செய்து அகற்ற வேண்டிய சூழல் கட்டாயம் இருப்பின் மட்டுமே அறுவை சிகிச்சைக்கு மருத்துவர்கள் பரிந்துரை செய்வர். அதிலும் குறிப்பாக, கருமுட்டை பையை அகற்றாமல் இருக்க வழிகள் இருக்கிறதா எனக் கண்டறிவர். இரண்டு பக்கமும் கரு முட்டை பை உள்ளதால் ஒன்றில் பாதிப்பு இருந்தால் கூட இன்னொன்றினை காப்பாற்ற முயற்சி செய்வர். அதனையும் மீறி தீவிர புற்றுநோய் போன்ற பல சூழலில் இரு பக்க பையினையும் நீக்க வேண்டிய நிலை வரும்.

எலும்புகளின் அடர்த்தி…

தாயின் கருவறையில் இருக்கும் போதிலிருந்தே நம் எலும்புகள் பலம் பெற தொடங்குகிறது. எலும்புகள் வலுவாய் இருக்க மிக முக்கியமான தேவையாக உணவினையும், உடற்பயிற்சியையும் சொல்லலாம். பல அடுக்குகளில் எலும்புகளின் அடர்த்தி வடிவமைக்கப்பட்டிருக்கிறது. எலும்பின் அடர்த்தியைக் கண்டறிய ‘டெக்சா ஸ்கேன்’ (Dexa Scan ) போன்ற பரிசோதனை செய்து அறிந்துகொள்ள வேண்டும்.

ஹார்மோன்களின் பங்கு…

பெண்களின் கருப்பையில் சுரக்கும் முக்கியமான ஹார்மோன்களில் ஒன்றான ‘ஈஸ்ட்ரோஜன்’ (Estrogen) எனும் ஹார்மோன், பெண்களின் எலும்பு அடர்த்தி குறையாமல் பாதுகாக்கிறது. மேலும், கெட்ட கொழுப்பினை கட்டுக்குள் வைத்து நல்ல கொழுப்பினை அதிகரித்து இதய அடைப்பு வராமல் தடுக்கிறது. இந்த ஹார்மோன்களால் அதிக உடல் எடை கூடாமல் தடுக்கும் வல்லமையும் உண்டு. மேலும் இன்சுலின் எதிர்ப்புத் தன்மை அதிகரிக்காமலும் தற்காக்கும். தொந்தரவுகள் இல்லாத நீண்ட தூக்கம் பெறுவதற்கும் இந்த ஹார்மோன்கள் உதவுகிறது. கோபம், எரிச்சல் போன்றவை இல்லாமல் தடுக்கவும் மன அமைதியுடன் இருக்கவும் உதவுகிறது.

கருமுட்டை பையினை நீக்கிவிட்டால் இந்த ஹார்மோன் சுரப்பில் பற்றாக்குறை ஏற்படும். இந்த ஹார்மோனின் இரண்டாம் சுரக்கும் இடம் சிறுநீரகத்தின் மேலே அமைந்திருக்கும் ஒரு சிறு சுரப்பி. எனினும் இதில் குறைந்த அளவில்தான் சுரக்கும் என்பதால் முதல் சுரக்கும் இடமான கருமுட்டை பை அவசியமாகிறது.

பாதிப்புகள்…

ஒரு சிலருக்கு கருப்பை மட்டும் நீக்குவர். ஆனால் ஒரு சிலருக்கோ கருப்பை (Uterus), கருப்பை வாய் (Cervix), கரு முட்டை பை (Ovaries) என முற்றிலும் நீக்க வேண்டிய சூழல் உண்டாகும். அவர்களுக்கு கீழ் வரும் பாதிப்புகள் வரலாம். அறுவை சிகிச்சை செய்து ஒரு சில வருடங்கள் கழித்தே பாதிப்புகள் தோன்ற ஆரம்பிக்கும்.

*எலும்புகளின் அடர்த்தி மற்றும் தசை அடர்த்தி குறைவதனால் ஏற்படும் உடல் வலி, மூட்டு வலி, முதுகு வலி என பிரச்னைகள் தொடங்கும்.

*தூக்கம் இடையில் தடைபடுவது, படுத்ததும் வெகு நேரம் தூங்காமல் இருப்பது என சிக்கல்கள் தோன்றலாம்.

*உடல் எடை அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம் உள்ளது.

*ரத்த சர்க்கரை அளவு அதிகரிக்கும் வாய்ப்பு அதிகம்.

*மன அழுத்தம், கோபம், எளிதில் எரிச்சல் அடைவது என மன மாற்றங்கள் நிகழும்.

வருமுன் காப்போம்…

*அறுவை சிகிச்சை முடிந்து ஒரு சில மாதங்களில் உடல் தேறியதும் உடற்பயிற்சிகள் செய்யத் தொடங்க வேண்டும்.

*சூரிய ஒளியில் தினசரி இருபது நிமிடங்கள் நிற்க வேண்டும்.

*சரிவிகித உணவு முறையினை கடைபிடிப்பது கட்டாயம்.

*மருத்துவர் பரிந்துரைத்தால் சுண்ணாம்புச் சத்து மாத்திரைகள் எடுத்துக்கொள்ளலாம்.

*மூன்று முதல் ஐந்து வருடத்திற்கு ஒரு முறை எலும்பு அடர்த்தியின் அளவுகள் அறியும் பரிசோதனையை செய்துகொள்ள வேண்டும்.

*நீச்சல், நடனம், மலை ஏறுதல், சூம்பா என ஏதேனும் ஒன்றை பழக்கமாக்கிக் கொள்ளுதல் அவசியம்.

இயன்முறை மருத்துவம்…

அறுவை சிகிச்சை முடிந்து ஆறு மாதங்கள் கழித்து அருகில் உள்ள இயன்முறை மருத்துவரை அணுகி உரிய ஆலோசனைகளையும், உடற்பயிற்சிகளையும் கற்றுக்கொள்ள வேண்டும். தசை வலிமை பயிற்சிகள், தசை தளர்வு பயிற்சிகள், இதய நுரையீரல் தாங்கும் திறன் பயிற்சிகள் என பல வகை பயிற்சிகள் கற்றுத்தரப்படும். அவரவரின் உடல் நிலை, தசை திறனுக்கு ஏற்ப பயிற்சிகள் மாறுபடும் என்பதால், யூடியூப், டிவி பார்த்துதானாகவே செய்தால் ஆபத்தில் முடியலாம்.

உடற்பயிற்சியின் நன்மைகள்…

*எலும்புகளின் அடர்த்தி அதிகரிக்கும்.
*எலும்பினை வலுவாய் மாற்றும்.
*தசைகளை வலுவாய் மாற்றும்.
*தசைகளின் திறன் மற்றும் அடர்த்தி அதிகமாகும்.
*உடல் வலி, மூட்டு வலி, குதிகால் வலி, முதுகு வலி என எந்த வலியும் வராது.
*சீரான தூக்கத்தை இயல்பாய் பெற முடியும்.
*நம் மன ஓட்டங்களை, உணர்வுகளை கட்டுக்குள் கொண்டு வர முடியும்.
*உடல் எடையை கட்டுக்குள் வைக்க முடியும்.
*இன்சுலின் உற்பத்தியை சீராய் வைத்திட முடியும்.

எனவே, நம் உடலியல் சார்ந்த விழிப்புடன் நாம் செயல்படும் போது நமது ஆரோக்கியம் மேலும் செம்மைப்
படும் என்பது உறுதி.

தொகுப்பு: கோமதி இசைக்கர் இயன்முறை மருத்துவர்

The post இளம் வயது கருப்பை நீக்கம்! appeared first on Dinakaran.

Read Entire Article