தீபாவளி திருநாளை பொதுவாக தீபத் திருநாள் என போற்றப்படுகிறது. அன்றைய தினம் தீபங்களை வரிசைப்படுத்தி வழிபாடு செய்ய வேண்டும் என்று சொல்வார்கள். ஆனால் தீபாவளியில் அப்படி வழிபடும் வழக்கம் தமிழகத்தில் இல்லை. ஆனால் திருக்கார்த்திகை திருநாளில், ஒவ்வொரு வீட்டையும், அகல் விளக்குகள் அலங்கரிக்கும் என்பதை அனைவரும் அறிவர். கார்த்திகை தீபத்திருநாள் ஆண்டுதோறும் கார்த்திகை மாதம், கார்த்திகை நட்சத்திரத்தன்று கொண்டாடப்படுகிறது. .
திருக்கார்த்திகை தினத்தன்று இல்லங்கள் தோறும் பல்வேறு எண்ணிக்கையில் அகல் விளக்குகளை ஏற்றி, மக்கள் இறை வழிபாட்டை மேற்கொள்வர். இல்லத்தில் இருள் அகன்று ஒளிவீசுவதுபோல், மனிதர்களுள் இருக்கும் அஞ்ஞான இருளைப் போக்கி மெய்ஞானத்தை வழங்குகிறது தீப வழிபாடு.
தமிழ்நாட்டில் திருவிளக்கு இறைவனின் பிரதிநிதியாக பார்க்கப்படுவதால், அதற்கான மரியாதை அளிக்கப்படுகிறது.
பூஜைக்கு ஏற்றப்படும் திருவிளக்கிற்கு பால், சர்க்கரை, கற்கண்டு போன்றவற்றை நைவேத்தியமாகவும், கார்த்திகை தீபத்தன்று அவல், பொரியில் வெல்லப் பாகு சேர்த்தும், கார்த்திகை பொரி படைத்தும் வழிபாடு செய்யவேண்டும். கார்த்திகை தீபத் திருநாள் அன்று அகல் விளக்குகளை சுவாமி அறையில் ஏற்றி, கற்பூர தீபாராதனை செய்து வழிபடவேண்டும்.
விளக்குகளை அணைப்பதற்கும் விதிகள் உள்ளன. வெறும் வாயினால் ஊதி விளக்கை அணைக்கக் கூடாது. பூ அல்லது நீர்த் துளி, பால் துளியைக் கொண்டு விளக்கினை அமர்த்த வேண்டும். தீபத்தை வடக்கு திசை நோக்கி ஏற்றுவது அறிவு வளர்ச்சியும், செல்வ வளர்ச்சியும் தரும். கிழக்கு திசையில் ஏற்றுவது துன்பங்களை நீக்கும். மேற்கு திசையில் ஏற்றுவது கடன் தொல்லைகளையும், தோஷங்களையும் போக்கும். ஆனால் தெற்கு திசையில் தீபங்களை ஏற்றக்கூடாது.
இந்த ஆண்டு கார்த்திகை தீபத்திருநாள் நாளை (13.12.2024) கொண்டாடப்படுகிறது.