இலைக்கட்சியினர் மாற்றுக்கட்சிக்கு படையெடுப்பதை தடுக்க நடந்த ரகசிய கூட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா

3 weeks ago 5

‘‘பில் செட்டில்மென்ட் செய்ய கட்டிங் கட்டாயம் என்பதில் ரொம்ப கறாராக இருக்கும் பொறியாளரால் தலையில் கைவைக்கும் நிலைக்கு கான்ட்ராக்டர்கள் போயிட்டாங்களாமே..’’ என்றபடி வந்தார் பீட்டர் மாமா.
‘‘வெயிலூர் நகரில் முருக கடவுளின் பெயரில் முடியும் வேறு பெயரை கொண்ட பொறியாளர் உள்ளாராம்.. இவரு கான்ட்ராக்டர்களிடம் பில்லை செட்டில் செய்ய வேண்டுமானால், ‘கட்டிங்’ தர வேண்டும் என்கிறாராம்.. அவர்கள் மறுத்தால், கவுன்சிலர்கள் மூலம் பணி சரியாக செய்யவில்லை என்று சொல்லி பிரச்னை செய்வேன் என மிரட்டுகிறாராம்.. அவருக்கு பக்கபலமாக இலை கட்சியை சேர்ந்தவர்கள் உள்ளார்களாம்.. அதோடு 15 கவுன்சிலர்களும் என் பக்கம்தான் என்றும் சொல்கிறாராம்.. இதனால் கான்ட்ராக்டர்கள் என்ன செய்வது என்று தலையில் கையை வைத்துக் கொண்டு உட்காரும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளார்களாம்.. இவர்களை போன்றவர்களால் அரசின் பெயரே கெடுகிறது என்பதுதான் மாநகர அலுவலகத்தில் உள்ள மற்ற அலுவலர்கள் மத்தியில் வேதனையாக வெளிப்படுகிறதாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இளம் எம்எல்ஏவின் பேச்சை கேட்டு பெண்ணிடம் கோடிக்கணக்கில் ஏமாந்துட்டாங்களாமே அரசியல்வாதிகள்..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘புதுச்சேரியில் இளம் எம்எல்ஏ ஒருவர், இவர் எனது அத்தை எனக்கூறியதோடு நம்பகமானவர், ₹50 லட்சம், ₹1 கோடி ஏலச்சீட்டு நடத்துகிறார். இவருக்கு நான் கியாரண்டி, பணத்தை கட்டுங்கள் எனக்கூறி அமைச்சர், எம்எல்ஏக்கள், அரசியல்வாதிகள், தொழிலதிபர்கள் என பலரையும் அறிமுகம் செய்து வைத்துள்ளார். இதனை நம்பிய அமைச்சர், மாஜி அமைச்சர், எம்எல்ஏ என எல்லோரும் போட்டிப்போட்டு சீட்டு போட்டாங்களாம்.. அதில் ₹20 கோடி அளவுக்கு பணம் பரிவர்த்தனை ஆனதும் இளம் எம்எல்ஏவின் அத்தை தனது கணவருடன் எஸ்கேப் ஆயிட்டாராம்.. பணம் பறிபோனது தெரிந்ததும் அதிர்ச்சியில் பலரும் போலீசில புகார் கொடுத்திருக்கிறாங்க.. அப்போது கோடிக்கணக்கில் பணம் ெகாடுத்து ஏமாந்த முக்கிய அரசியல் புள்ளிகள் போலீஸ் அதிகாரிக்கு போன் செய்து, சார் ₹1 கோடி வரை பணத்தை கட்டி, அந்த பெண்ணிடம் ஏமாந்துவிட்டேன். தம்பதியை கைது செய்து, என் பணத்தை மீட்டு தாருங்கள் என கோரசாக கேட்டாங்களாம்.. அதைவிட முக்கியமா இந்த விஷயம் வெளியே வராம பார்த்துக்குங்க… எங்க மானமே போயிடும்னு கெஞ்சி கேட்டுக்கிட்டாங்களாம்.. போலீசார் விசாரணையிலதான் பெரிய, பெரிய பார்ட்டிகள் எல்லாம் ஏமாந்திருக்கிறது இப்போது தெரியவந்திருக்காம்.. அதோட இந்த விஷயம் வெளியே தெரியாமல் இருக்க கமுக்கமாக விசாரணை நடத்தி வருகிறார்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சியினர் மாற்றுக்கட்சிக்கு படையெடுப்பதை தடுக்க விரைவில் ஏராளமான சலுகைகள் கிடைக்கும் என மாஜிக்கள் உத்தரவாதத்தை அள்ளி விடுகிறாங்களாமே..’’ என்றார் பீட்டர் மாமா.
‘‘பூட்டுக்கு பெயர் போன மாவட்டத்தில் இலைக்கட்சியில் இருந்து பலரும் மாற்றுக்கட்சிக்கு படை எடுத்து கிளம்புறாங்க… குறிப்பாக இளைஞர் பாசறையில் விரல்விட்டு எண்ணும் அளவில் தான் நிர்வாகிகள் இருக்கின்றனராம்.. மாற்றுக்கட்சிக்கு படை எடுப்பதை எப்படி தடுப்பது என்பது குறித்து மாஜி உளறல் மந்திரி தலைமையில் பாசறையினர் மட்டும் பங்கேற்ற ரகசிய கூட்டம் அண்மையில் நடந்திருக்கு.. அதில், தூங்கா நகரத்து மாஜி உதயமானவர், கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த மாஜி மணியானவர் உள்ளிட்டோர் பங்கேற்றாங்களாம்.. அதில், பேசிய பாசறை செயலாளரான ஆதிசிவன் பெயரைக் கொண்ட மருத்துவர், பாசறையில் இருப்போருக்கு விரைவில் ஊக்கத்தொகை வழங்கவுள்ளோம்.. யாரும் மாற்றுக்கட்சிகளுக்கு போக வேண்டாம் என அதிரடியாக கூறினாராம்.. இவருக்கு பின்னால் பேசிய கொங்கு மண்டல மணியானவரோ, விரைவில் ஏராளமான சலுகைகள் கிடைக்கும். அவசரப்படாதீங்க என உத்தரவாதத்தை அள்ளி விட்டாராம்.. கட்சியில் இருந்து வெளியேறுவதை தடுக்க போட்டிப்போட்டு உத்தரவாதத்தை அள்ளிவிட்டது கட்சியின் இதர அணிகளில் உள்ளவர்கள் மத்தியில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தி இருக்காம்.. கட்சியின் ஆணி வேராய் இருக்கும் நம்மை விட்டுவிட்டு, கட்சிக்கு புதிதாய் வந்தவர்களை வைத்து ரகசிய கூட்டம் நடத்தும் அளவுக்கு கட்சியின் நிலைமை போய்விட்டதே என அவங்க புலம்புகிறாங்களாம்..’’ என்றார் விக்கியானந்தா.

‘‘இலைக்கட்சி நிறுவனர் நினைவு நாளில் சேலத்துக்காரரை வெறுப்பு ஏத்தணும் என்றே மெசேஜ்களை பரவ விட்டாங்களாமே தெரியுமா..’’ எனக்கேட்டார் பீட்டர் மாமா.
‘‘சமீபத்தில் இலை கட்சியின் நிறுவனரான மறைந்த மூன்றெழுத்து லீடரின் நினைவுநாள் அனுசரிக்கப்பட்டது. அப்போது ஒன்றியத்தில் கோலாச்சுபவரையும், மூன்றெழுத்து தலைவரையும் ஒப்பிட்டு மவுண்டன் லீடரு பேசியது சர்ச்சையை உருவாக்கியது.. இதற்கு இலை கட்சி சார்பில் ஜெயமான மாஜி காட்டமாக பதிலடி ஒன்றையும் கொடுத்திருந்தார். இது ஒருபுறமிருக்க, ஜெனரல் செகரட்டரியான சேலத்துக்காரரின் மாங்கனி மாவட்டத்தில் மூன்றெழுத்து தலைவரை புகழ்ந்து நிறைய மீம்ஸ்கள் வந்ததாம்.. அதிலும் குறிப்பாக, சமீபகாலமாக அவர் ஓரங்கட்டி வைத்திருக்கும் தாமரை கட்சியின் நிர்வாகிகள் குழுவில் பக்கம் பக்கமாக மூன்ெறழுத்து தலைவரை புகழ்ந்து மெசேஜ்களை பார்வேர்டு செய்துகிட்டே இருந்தாங்களாம்.. மிக முக்கியமாக ஒரு மதத்திற்கு அவர் அதை செய்தார், கோயில்களுக்கு அவர் இதை செய்தார் என்று நீளமான பட்டியல் ஒன்றையும் போட்டிருந்தாங்களாம்.. மொத்தத்தில் மெசேஜ்களில் அந்த மூன்றெழுத்து தலைவருக்கு முடிந்தளவு தங்கள் கட்சி சாயத்தை பூசி இருந்தாங்களாம்.. இதற்கிடையில் இதுவெல்லாம் இப்போது இலைகட்சியில் இருப்பவர்களுக்கு தெரியுமா என்ற கொஸ்டீனும் பிரதானமாக இருந்ததாம்.. இலை கட்சிக்காரரரை வெறுப்பேத்துவதற்குத்தான், அவரது சொந்த ஊரில் இப்படிப்பட்ட மெசேஜ்களை பரவ விட்டிருக்காங்க என்பது விவரம் அறிந்த தாமரைக்கட்சி நிர்வாகிகள் சொல்லும் சேதி..’’ என்று முடித்தார் விக்கியானந்தா.

The post இலைக்கட்சியினர் மாற்றுக்கட்சிக்கு படையெடுப்பதை தடுக்க நடந்த ரகசிய கூட்டம் பற்றி சொல்கிறார்: wiki யானந்தா appeared first on Dinakaran.

Read Entire Article