மண்டபம்: ராமநாதபுரம் மாவட்டம், மண்டபம் கடலோர பகுதியில் இருந்து இலங்கைக்கு கடத்தி செல்ல, சில பண்டல்களை பதுக்கி வைத்திருப்பதாக, மாவட்ட தனிப்பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதன்பேரில் நேற்று இரவு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர். பிரப்பன் வலசை பகுதியில் கடலோரத்தில் பதுக்கி வைத்திருந்த 19 பண்டல்களை பறிமுதல் செய்தனர். அவைகளை பிரித்து பார்த்தபோது, 3 லட்சத்து 80 ஆயிரம் வெளிநாட்டு சிகரெட்கள் இருந்தது தெரிய வந்தது. மதிப்பு இலங்கை ரூபாயில் ரூ.6.27 கோடி எனவும், இந்திய மதிப்பில் ரூ.3 கோடிக்கு மேல் எனவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதேபோல, மண்டபம் அருகே வேதாளை கடற்கரை சாலையில் கியூபிரிவு போலீசார் நேற்றிரவு வாகன சோதனை நடத்தினர். அந்த வழியாக டூவீலரில் பார்சல்களை எடுத்து கொண்டு 2 பேர் வந்தனர். அவர்களை மறித்து சோதனை செய்தபோது, 25 கிலோ கஞ்சா ஆயில் பாக்கெட்டுகள் இருந்தது தெரிய வந்தது. அவைகளை பறிமுதல் செய்தனர். அவைகளை கடத்தி வந்த ராமநாதபுரம் மாவட்டம், முதுகுளத்தூர் அருகே கிடாதிருக்கை பகுதியை சேர்ந்த நம்பு (37), மண்டபம் வேதாளை பகுதியை சேர்ந்த பாண்டி (35) ஆகியோரை கைது செய்தனர்.
கைப்பற்றப்பட்ட கஞ்சா ஆயில் மதிப்பு ரூ.பல லட்சம் எனக் கூறப்படுகிறது. இதையடுத்து கடத்தல் பொருட்களை உச்சிப்புளி, மண்டபம் பகுதி காவல்நிலையங்களில் தனிப்பிரிபு போலீசார் ஒப்படைத்தனர். போலீசார் வழக்குப்பதிந்து இரு கடத்தல்களுக்கும் தொடர்பு உள்ளதா? இதன் பின்னணியில் யாரேனும் உள்ளனரா? என தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
The post இலங்கைக்கு கடத்த பதுக்கி வைத்திருந்த பல கோடி மதிப்புள்ள கஞ்சா ஆயில் வெளிநாட்டு சிகரெட் பறிமுதல்: மண்டபம் அருகே தனிப்பிரிவு போலீசார் அதிரடி appeared first on Dinakaran.