இலங்கைக்கு எதிரான முதலாவது டெஸ்ட்: வங்காளதேச அணி 484 ரன்கள் குவிப்பு

1 week ago 6

காலே,

இலங்கை-வங்காளதேச அணிகள் இடையிலான 2 ஆட்டங்கள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதலாவது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி காலேயில் நேற்று முன்தினம் தொடங்கியது.

'டாஸ்' ஜெயித்து முதலில் பேட் செய்த வங்காளதேச அணி முதல் நாள் முடிவில் முதல் இன்னிங்சில் 90 ஓவர்களில் 3 விக்கெட்டுக்கு 292 ரன்கள் எடுத்து இருந்தது. நேற்று 2-வது நாள் ஆட்டம் நடந்தது. நஜ்முல் ஹூசைன் ஷன்டோ 148 ரன்னில் (279 பந்து, 15 பவுண்டரி, ஒரு சிக்சர்) அசிதா பெர்னாண்டோ பந்து வீச்சில் பெவிலியன் திரும்பினார்.அடுத்து வந்த லிட்டான் தாஸ், முஷ்பிகுர் ரஹிமுடன் இணைந்தார். இருவரும் துரிதமாக ரன் சேர்த்தனர்.

மதிய உணவு இடைவேளைக்கு பிறகு மழை பெய்ததால் சுமார் 2½ மணி நேரம் பாதிப்புக்கு பிறகு ஆட்டம் தொடர்ந்து நடந்தது. அதன் பிறகு விக்கெட்டுகள் வேகமாக வீழ்ந்தன. நிலைத்து நின்று ஆடிய முஷ்பிகுர் ரஹிம் 163 ரன்னில் (350 பந்து, 9 பவுண்டரி) அசிதா பெர்னாண்டோ பந்து வீச்சில் எல்.பி.டபிள்யூ. ஆனார். 5-வது விக்கெட்டுக்கு முஷ்பிகுர்-லிட்டான் தாஸ் 149 ரன்கள் சேர்த்தனர். அடுத்த ஓவரில் லிட்டான் தாஸ் (90 ரன், 123 பந்து, 11 பவுண்டரி, ஒரு சிக்சர்) மிலன் ரத்னாயகே பந்து வீச்சில் சிக்கினார்.

போதிய வெளிச்சம் இல்லாததால் ஆட்டம் முன்கூட்டியே முடித்து கொள்ளப்பட்டது. நேற்றைய ஆட்டம் முடிவில் வங்காளதேச அணி 151 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கு 484 ரன்கள் குவித்துள்ளது. கடைசி 5 விக்கெட்டுகள் 26 ரன்னுக்குள் சரிந்தன. ஹசன் மக்முத், நஹித் ராணா ரன் எதுவும் எடுக்காமல் களத்தில் உள்ளனர். இலங்கை தரப்பில் அசிதா பெர்னாண்டோ, மிலன் ரத்னாயகே, தாரிந்து ரத்னாயகே தலா 3 விக்கெட் கைப்பற்றினர்.

இன்று 3-வது நாள் ஆட்டம் நடக்கிறது. மழை பாதிப்பை ஈடுகட்ட 15 நிமிடம் முன்னதாக ஆட்டம் தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read Entire Article