சென்னை: இலங்கை நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள் குறித்து கருத்து தெரிவித்துள்ள மதிமுக பொதுச் செயலாளர் வைகோ, “தமிழர்கள் ஏமாந்துவிட்டார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், “நாடாளுமன்றத் தேர்தலில் மூன்றில் இரண்டு பங்குக்கும் அதிகமாக இடங்களில் வெற்றி பெற்று இருப்பதால், கொடிய சட்டத் திருத்தங்களைக் கொண்டுவர இலங்கை அதிபர் திசாநாயக்க முற்படுவார்” என்றும் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “மிகக் கொடூரமான தமிழினப் படுகொலைக்கு ராஜபக்சே அரசு காரணம் என்றாலும், ஈழத் தமிழர் பிரச்சினையில் சிங்கள இனவாத வெறிகொண்ட ஜேவிபி கட்சியினுடைய குரலாக, தமிழர்களுக்கு எதிராக தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு வந்தவர்தான் இன்றைய அதிபர் அநுர குமார திசாநாயக்க. அவரது கட்சியான தேசிய மக்கள் சக்தி கட்சி, ஜேவிபியினுடைய மறு பதிப்பாகும். தொடக்கத்திலிருந்தே தமிழினத்தை அழிக்க வேண்டும் என்ற கொலைவெறி நோக்கம் கொண்டவர்தான் திசநாயக்க.