இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.176 கோடியில் 2,757 வீடுகள் கட்டி ஒப்படைப்பு: அமைச்சர் நாசர் தகவல்

3 hours ago 1

சென்னை: இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் ரூ.176 கோடி செலவில் 2757 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் நாசர் தெரிவித்துள்ளார். தமிழக சட்டப்பேரவையில் நேற்று சிறுபான்மையினர் நலன் மற்றும் வெளிநாடுவாழ் தமிழர் நலத்துறை மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு பதிலளித்து அமைச்சர் நாசர் பேசியதாவது:

கடந்த 2024-25ம் நிதியாண்டில் ரூ.6,13,69,924 செலவில் முகாம்களில் வசிக்கும் 19,551 இலங்கை தமிழர்களுக்கு ஆடைகள் வழங்கப்பட்டுள்ளது. 2023-24ம் நிதியாண்டில் 19,498 குடும்பங்களுக்கு ரூ.2,50,54,930 பயன்பாட்டிற்குரிய பாத்திரங்களை வழங்கி நம்பிக்கை கொடுத்தது திராவிட மாடல் அரசு. 2024-25ம் நிதி ஆண்டில் 15,896 இலங்கைத் தமிழர் குடும்பங்களுக்கு தலா 5 இலவச எரிவாயு உருளைக்கான மானியத் தொகை ரூ.3,17,92,000 வழங்கப்பட்டுள்ளது.

மேலும் 2023-24ம் நிதியாண்டில் முகாம்களில் வாழ்கின்ற 1944 இலங்கை தமிழ் மாணவ, மாணவியருக்கு கல்வி உதவித்தொகை ரூ.3,76,05,365 வழங்கியுள்ளது. மேலும் முகாம்களில் வசிக்கின்ற 200 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு தலா ரூ.1.25 லட்சம் வீதம் ரூ.2.50 கோடி வழங்கப்பட்டுள்ளது. முகாம்களில் வசிக்கின்ற இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் முதல் கட்டத்தில் ரூ.176 கோடி செலவில் 3510 வீடுகள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் 2757 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளிடம் ஒப்படைத்து சாதனை படைத்துள்ளது.

மேலும், 753 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்க தயார் நிலையிலும் இந்த அரசு வைத்துள்ளது. அதன் இரண்டாம் கட்டமாக 3,959 வீடுகள் கட்ட நிர்வாக ஒப்புதல் வழங்கப்பட்ட நிலையில் 236 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், 486 வீடுகள் கட்டி முடிக்கப்பட்டு ஒப்படைக்க தயார் நிலையில் உள்ளது. இவ்வாறு அவர் பேசினார்.

The post இலங்கை தமிழர்களுக்கு வீடுகள் கட்டும் திட்டத்தின் கீழ் ரூ.176 கோடியில் 2,757 வீடுகள் கட்டி ஒப்படைப்பு: அமைச்சர் நாசர் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article