விழுப்புரம், திருப்பூர், சேலம், தருமபுரி மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் இன்று (7.7.2025) தலைமைச் செயலகத்தில், பொது மற்றும் மறுவாழ்வுத்துறை சார்பில் விழுப்புரம் மாவட்டம் – கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் – திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் – தம்மம்பட்டி, தருமபுரி மாவட்டம் – நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருதுநகர் மாவட்டம் – கண்டியாபுரம் ஆகிய இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை திறந்து வைத்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் கடந்த 27.08.2021 அன்று சட்டமன்றப் பேரவை விதி எண்.110-ன் கீழ் வெளியிடப்பட்ட அறிவிப்பில், முகாம் வாழ் இலங்கைத் தமிழர்கள் இனி பாதுகாப்பான, கௌரவமான, மேம்படுத்தப்பட்ட வாழ்க்கை வாழ்வதை உறுதி செய்யும் என்று அறிவித்ததுடன், இலங்கை அகதிகள் முகாம் என்பதை இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம் என்று பெயர் மாற்றம் செய்தும் அறிவித்தார்.
முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு வழங்கப்பட்டுவரும் மாதாந்திர பணக்கொடை, துணிமணிகள், பாத்திரங்கள், கல்வி உதவித் தொகை ஆகிய நலத்திட்டங்களை உயர்த்தப்பட்ட விகிதத்தில் வழங்கப்படும் என அறிவித்ததுடன், இலவச சமையல் எரிவாயு இணைப்பு, அடுப்பு மற்றும் சமையல் எரிவாயு மானியம், மகளிர் சுய உதவி குழுக்களுக்கு சமுதாய முதலீட்டு நிதி, இளைஞர்களுக்கு வேலைவாய்ப்புடன் கூடிய திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும் எனவும் அறிவித்தார். இத்திட்டங்கள் அனைத்தும் சீரிய முறையில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன.
மேலும், தமிழ்நாடு முதலமைச்சர் முகாம்வாழ் இலங்கைத் தமிழர்களுக்கு மிகவும் பழுதடைந்த நிலையில் உள்ள 7469 வீடுகளுக்கு மாற்றாக புதிய வீடுகள் கட்டித்தரப்படும் எனவும் அறிவித்தார். அதன்படி 26 மாவட்டங்களில் உள்ள 67 முகாம்களில் 7469 புதிய வீடுகள் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, புதிய வீடுகள் கட்டப்பட்டு வருகிறது. இதில் முதற்கட்டமாக 3510 புதிய வீடுகள் 180 கோடியே 34 இலட்சம் ரூபாய் செலவில் 19 மாவட்டங்களில் உள்ள 35 முகாம்களில் கட்டுவதற்கு ஆணைகள் வழங்கப்பட்டு, இவற்றில், ஏற்கனவே 18 மாவட்டங்களில் உள்ள 32 முகாம்களில் கட்டிமுடிக்கப்பட்ட 2781 புதிய வீடுகள் பயனாளிகளுக்கு ஒப்படைக்கப்பட்டது.
அதன் தொடர்ச்சியாக, விழுப்புரம் மாவட்டம் – கீழ்புத்துப்பட்டு, திருப்பூர் மாவட்டம் – திருமூர்த்தி நகர், சேலம் மாவட்டம் – தம்மம்பட்டி, தருமபுரி மாவட்டம் – நாகாவதி அணை மற்றும் கேசர்குளி அணை, விருதுநகர் மாவட்டம் – கண்டியாபுரம் ஆகிய ஆறு இடங்களில் உள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாம்களில் 38 கோடியே 76 இலட்சம் ரூபாய் செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை தமிழ்நாடு முதலமைச்சர் திறந்து வைத்தார்.
The post இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம்களில் ரூ.38.76 கோடி செலவில் கட்டப்பட்டுள்ள 729 வீடுகளை திறந்து வைத்தார் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் appeared first on Dinakaran.