இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலுவான தூதரக நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம்

3 months ago 18

சென்னை: இலங்கைக் கடற்படையினரால் தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிக்கப்படுவதை தடுக்கவும், மீனவர்களையும், மீன்பிடிப் படகுகளையும் உடனடியாக விடுவிக்க வலுவான தூதரக நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும் என ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் மூலம் வலியுறுத்தியுள்ளார்.

ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் எழுதிய கடிதத்தில் கூறியிருப்பதாவது:
ராமேஸ்வரம் மீன் பிடித்தளத்திலிருந்து இரண்டு படகுகளில் கடந்த 28ம் தேதியன்று தமிழ்நாட்டைச் சேர்ந்த 17 மீனவர்கள் மீன்பிடிக்கச் சென்றிருந்த நிலையில், நேற்று நெடுந்தீவு அருகே இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழ்நாட்டைச் சேர்ந்த மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்படுவதும், அவர்களது படகுகள் பறிமுதல் செய்யப்படுவதும் கடலோர பகுதிகளில் வாழும் மீனவ சமுதாயத்தினரிடையே மிகுந்த துயரத்தையும், அவர்களது வாழ்வில் நிச்சயமற்ற தன்மையையும் ஏற்படுத்தியுள்ளது.

இந்த சிக்கலான பிரச்னையை தூதரக ரீதியாக தீர்த்திட உறுதியான மற்றும் ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று தான் ஏற்கனவே வலியுறுத்தியுள்ளேன், நிலைமையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கடந்த 27ம் தேதி பிரதமரிடம் சமர்ப்பித்த கோரிக்கைகளில் ஒன்றாக இந்தக் கோரிக்கையையும் வலியுறுத்தியுள்ளேன். எனவே, நமது மீனவர்கள் கைது செய்யப்படுவதை தடுக்கவும், சிறைபிடிக்கப்பட்டுள்ள அனைத்து மீனவர்களையும், அவர்களது மீன்பிடி படகுகளையும் இலங்கை அரசிடமிருந்து உடனடியாக விடுவிக்கவும், வலுவான மற்றும் பயனுள்ள தூதரக நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

The post இலங்கை கடற்படையினரால் சிறைபிடிக்கப்பட்டுள்ள மீனவர்களை உடனடியாக விடுவிக்க வலுவான தூதரக நடவடிக்கை வேண்டும்: ஒன்றிய வெளியுறவுத்துறை அமைச்சருக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் appeared first on Dinakaran.

Read Entire Article