இருப்பில் உள்ளது விற்பனைக்கு வருவதால் தேங்காய் டன்னுக்கு ரூ10 ஆயிரம் சரிந்தது

10 hours ago 1


சேலம்: விவசாயிகள், வியாபாரிகளிடம் இருப்பில் உள்ள தேங்காய் விற்பனைக்கு வருவதால் ஒன்றரை வாரத்தில் தேங்காய் டன் விலை ரூ10 ஆயிரம் வரை சரிந்துள்ளது. தமிழகத்தில் பல பகுதிகளில் தென்னைமரங்கள் அதிகளவில் உள்ளன. இந்த பகுதிகளில் ஆண்டு முழுவதும் தேங்காய் பறிக்கப்பட்டு தமிழகத்தின் பல பகுதிகளுக்கும், இதைதவிர வட மாநிலங்களுக்கு மாநிலங்களுக்கும் விற்பனைக்கு அனுப்பப்படுகிறது. கடந்தாண்டு போதிய மழை இல்லாததால் தேங்காய் விளைச்சல் பாதித்தது. கடந்த ஜனவரியில் இருந்து கடந்த ஆகஸ்ட் முதல் வாரம் தேங்காய் வரத்து சீராக இருந்தது. இந்நிலையில் கடந்த இரு மாதமாக சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்டங்களில் ேதங்காய் விளைச்சல் கடும் சரிவை சந்தித்துள்ளது. இதன் காரணமாக சேலம் மார்க்கெட்டுக்கு தேங்காய் வரத்து சரிந்து, கடந்த இரண்டரை மாதமாக 50 சதவீதம் விலை அதிகரித்து இருந்தது.

தற்போது இருப்பில் உள்ள தேங்காய் விற்பனைக்கு வருவதால் தேங்காய் விலை சரிந்து வருவதாக வியாபாரிகள் தெரிவித்தனர். இதுகுறித்து சேலத்தை சேர்ந்த தேங்காய் மொத்த வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து சேலம் மார்க்கெட்டுக்கு நாள் ஒன்றுக்கு 200 முதல் 300டன் தேங்காய் விற்பனைக்கு வருகிறது. இங்கு விற்பனைக்கு வரும் தேங்காயை ஆத்தூர், மேட்டூர், மேச்சேரி, ஓமலூரை சேர்ந்த சில்லரை வியாபாரிகள் வாங்கிச் சென்று விற்பனை செய்கின்றனர். கடந்த இரு மாதமாக தமிழகம் முழுவதும் பரவலாக தேங்காய் விளைச்சல் குறைந்துள்ளது. மேலும் வட மாநிலங்களில் தேங்காய் விளைச்சல் அறவே சரிந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் இருந்து தான் வட மாநிலங்களுக்கு தேங்காய் செல்கிறது. விளைச்சல் பாதிப்பு, ஆயுதபூஜை, தீபாவளி பண்டிகை என்பதால் தேவை அதிகரித்து இருந்தது.

கடந்த செப்டம்பர், அக்டோபர் மாதத்தில் வரலாறு காணாத அளவில் தேங்காய் விலை அதிகரித்தது. விலை உயர்வு காரணமாக தேங்காய் விற்பனையும் மந்தமாக இருந்தது. இந்தநிலையில் விவசாயிகள், வியாபாரிகளிடம் இருப்பில் உள்ள தேங்காய் கடந்த ஒன்றரை வாரமாக விற்பனைக்கு வந்துகொண்டிருக்கிறது. இதன் காரணமாக நவம்பர் 1ம் தேதி ஒரு டன் தேங்காய் ரூ60 ஆயிரத்திற்கு விற்றது. நடப்பு வாரத்தில் டன் ரூ10 ஆயிரம் வரை சரிந்து, ரூ50 ஆயிரம் வரை விற்பனை செய்யப்படுகிறது. தற்போது ஒரு தேங்காய் ரூ12 முதல் ரூ30 வரை விற்பனை செய்யப்படுகிறது. இவ்வாறு வியாபாரிகள் தெரிவித்தனர்.

The post இருப்பில் உள்ளது விற்பனைக்கு வருவதால் தேங்காய் டன்னுக்கு ரூ10 ஆயிரம் சரிந்தது appeared first on Dinakaran.

Read Entire Article