இரு காற்று சுழற்சி இணைவால் இன்று முதல் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை : வானிலை ஆய்வாளர்கள் தகவல்

5 hours ago 1

சென்னை: அரபிக் கடல் மற்றும் வங்கக் கடலில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி வடக்குப் பகுதியில் இணையும் வாய்ப்புள்ளதால் இன்று முதல் தமிழகத்தில் ஆங்காங்கே கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. மேலும், அந்தமான் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாக வாய்ப்புள்ளது. இதுகுறித்து வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது: அரபிக் கடலோரம் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி மகாராஷ்டிரா கரைக்கு நெருங்கி கடலோடு இணைந்த சுழற்சியாக தற்போது நீடித்துக் கொண்டு இருக்கிறது. அதாவது, காற்றழுத்த தாழ்வு நிலையாக மாறியுள்ளது.

வங்கக் கடலில் நிலை கொண்டு இருந்த காற்று சுழற்சி இன்னும் தற்போது இன்னும் முழுமையாக உள்ளே நுழையாமல், ஆந்திரக் கரையோரம் நீடித்துக் கொண்டு இருக்கிறது. நேற்று மாலையில் அது அரபிக் கடல் நோக்கி நகரத் தொடங்கியது. இது விலகும் நேரத்தில் இன்று (23ம்தேதி) அந்தமான் கடல் பகுதியில் புதிய காற்று சுழற்சி உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தமிழ்நாட்டில் இது பரவலாக மழை கொடுக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

மழையை பொறுத்தவரையில் ஆந்திரா, கோவா, மகாராஷ்டிராவில் மழை பெய்யும். தமிழகத்தில் மதுரை சிவகங்கை, புதுக்கோட்டை, ராமநாதபுரம் பகுதிகளில் ஓரிரு இடங்களில் நேற்று மழை பெய்தது. தென்மேற்கு பருவக் காற்று காரணமாக சாரல் மழை பெய்யும். இன்று (23ம் தேதி) தென்மேற்கு பருவக் காற்று தொடங்கும் என்பதால், 26ம் தேதி முதல் கனமழை பெய்யும். காலை 10 மணிக்கு பிறகு மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் சாரல் மழையாக பெய்யும். இது கெடைக்கானல் வரை பெய்யும். மதியத்துக்குள் தமிழகத்தில் அனைத்து மாவட்டத்திலும் ஆங்காங்கே மழை பெய்யும்.

திருச்சி, திண்டுக்கல், சேலம், திருப்பத்தூர், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிவகங்கை, ராமநாதபுரம், கன்னியாகுமரி வரையில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. டெல்டாவிலும் சென்னையிலும் நள்ளிரவில் மழை பெய்யும். 24ம் தேதி தென்மேற்கு பருவமழை தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக நீலகிரி, வால்பாறை பகுதிகளில் ரெட் அலர்ட் விடுகின்ற அளவுக்கு கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. ஒட்டுமொத்த மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியிலும் சாரல் மழை பெய்யும். பெரும்பாலும் அதிகாலை நேரத்தில் சாரல் மழை பெய்யும். தேனி, குற்றாலம், மேட்டூர் அணைப்பகுதியில் கனமழை பெய்யும் வாய்ப்புள்ளது. தாழ்வான பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்படவும் வாய்ப்புள்ளது. 25ம் தேதி மேலும் கூடுதலாக மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை: கோவா-தெற்கு கொங்கன் கடலோர பகுதிகளுக்கு அப்பால் மத்திய கிழக்கு அரபிக் கடல் பகுதிகளில் நேற்று ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவாகியுள்ளது. இது வடக்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக இன்று வலுவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிறகு அது மேலும் வலுவடையவும் வாய்ப்புள்ளது.

மத்திய மேற்கு மற்றும் அதை ஒட்டிய வடக்கு வங்கக் கடல் பகுதிகளில் ஒரு காற்றழுத்த தாழ்வுப் பகுதி 27ம் தேதியில் உருவாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக தமிழகத்தில் இன்றும் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய லேசான மழை பெய்யும். 27 மற்றும் 28ம் தேதி தமிழகத்தில் ஓரிரு இடங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்புள்ளது.

The post இரு காற்று சுழற்சி இணைவால் இன்று முதல் தமிழகத்தில் ஆங்காங்கே கன மழை : வானிலை ஆய்வாளர்கள் தகவல் appeared first on Dinakaran.

Read Entire Article