இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி குவைத் பயணம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு

4 weeks ago 8

புதுடெல்லி: இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி இன்று குவைத் பயணம் மேற்கொண்டார். இன்று மாலை அவரை வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாகமாக வரவேற்கின்றனர். வளைகுடா நாடான குவைத் நாட்டின் மன்னர் ஷேக் அல் அகமது அல் ஜாபர் அல் ஷபா அழைப்பை ஏற்று பிரதமர் மோடி, இன்று காலை ெடல்லியில் இருந்து இரண்டு நாள் பயணமாக குவைத் புறப்பட்டு சென்றார். பிரதமரின் இந்தப் பயணம் இரு நாட்டு உறவில் புதிய அத்தியாயத்தை உருவாக்கும் என்று ஒன்றிய வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்நிலையில் பிரதமர் மோடி வெளியிட்ட பதிவில், ‘இன்றும் நாளையும் நான் குவைத் செல்கிறேன். இந்த பயணம் குவைத்துடனான இந்தியாவின் வரலாற்றுத் தொடர்பை மேலும் வலுப்படுத்தும். குவைத் நாட்டின் இளவரசர் மற்றும் குவைத் பிரதமரை சந்திக்க ஆவலுடன் காத்திருக்கிறேன்.

இன்று மாலை நான் அங்குள்ள இந்திய சமூகத்தினருடன் உரையாடுவேன்; அரேபிய வளைகுடா கோப்பையின் தொடக்க விழாவிலும் கலந்துகொள்வேன்’ என்று பதிவிட்டுள்ளார். குவைத்துக்கு அரசுமுறை பயணம் மேற்கொண்டுள்ள மோடி, இந்தப் பயணத்தின்போது அந்நாட்டு முக்கியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்துவார். குவைத்தில் உள்ள இந்திய சமூகத்தினரையும் சந்திக்கிறார். இதற்கு முன்பு 1981ம் ஆண்டு இந்திய பிரதமராக இருந்த இந்திரா காந்தி குவைத் சென்றார். அதன் பிறகு இப்போதுதான் இந்திய பிரதமர் அந்நாட்டுக்குப் பயணம் மேற்கொண்டுள்ளார். இந்தப் பயணத்தின்போது வர்த்தகம், பாதுகாப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து ஆலோசிக்கப்பட இருக்கிறது. இந்தியாவுக்கு அதிக கச்சா எண்ணெய் ஏற்றுமதி செய்யும் நாடுகள் பட்டியலில் குவைத் 6வது இடத்தில் உள்ளது. குவைத்துக்கான இந்தியாவின் ஏற்றுமதி அண்மையில் 2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் என்ற புதிய உச்சத்தை எட்டியது. குவைத் இந்தியாவில் 10 பில்லியன் டாலர்களுக்கு மேல் முதலீடு செய்துள்ளது.

வளைகுடா ஒத்துழைப்பு அமைப்பில் உள்ள நாடுகளில் குவைத்துக்கு மட்டுமே பிரதமர் மோடி இதுவரை பயணிக்காமல் இருந்தார். இப்போது குவைத்துக்கும் அவர் சென்றுள்ளார். குவைத்தில் எண்ணெய் வளம் கண்டுபிடிக்கப்படுவதற்கு முந்தைய காலகட்டத்திலேயே இரு நாடுகள் இடையே கடல் வழி வர்த்தக உறவு வலுவாக இருந்து வந்துள்ளது. இதனால், இரு நாடுகளும் பாரம்பரியமாகவே நட்பு நாடுகளாக திகழ்கின்றன. குவைத்தில் இருந்து அரேபிய குதிரைகள், பேரிச்சை பழங்கள் இந்தியாவுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன. இந்தியாவில் இருந்து பல்வேறு வகை தானியங்கள், விலை உயர்ந்த துணி வகைகள், உணவுக்கான நறுமணப் பொருள்கள், மரம் சார்ந்த பொருள்கள் குவைத்துக்கு ஏற்றுமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

The post இரண்டு நாள் அரசுமுறை பயணமாக பிரதமர் மோடி குவைத் பயணம்: வெளிநாடு வாழ் இந்தியர்கள் உற்சாக வரவேற்பு appeared first on Dinakaran.

Read Entire Article