இரண்டாவது நாளாக பங்குச்சந்தைகள் உயர்வு: ஐ.டி.- நுகர்வோர் பங்குகளை வாங்க ஆர்வம்

2 weeks ago 1

மும்பை:

அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டிரம்பின் வரி விதிப்பு திட்டம், உலகளாவிய வர்த்தக போர் குறித்த கலக்கத்தை ஏற்படுத்த, இந்திய பங்குச்சந்தைகள் நேற்று முன்தினம் கடுமையான சரிவை சந்தித்தன. முதலீட்டாளர்களுக்கு ரூ. 7 லட்சம் கோடி அளவுக்கு இழப்பு ஏற்பட்டது.

அதன்பின்னர் நேற்று சரிவில் இருந்து மீண்ட சந்தைகள் ஏற்றம் பெற்றன. சென்செக்ஸ் 566.63 புள்ளிகள் உயர்ந்து 76,404.99 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 130.70 புள்ளிகள் உயர்ந்து 23,155.35 புள்ளிகளில் நிலைபெற்றது. இந்த சாதகமான போக்கு இன்றும் நீடித்தது.

இந்திய சந்தைகளில் இன்று வர்த்தகம் ஏற்ற இறக்கத்துடன் இருந்தாலும், ஐ.டி., நுகர்வோர் சாதனங்கள் மற்றும் கமாடிட்டி பங்குகளை வாங்குவதில் முதலீட்டாளர்கள் சற்று ஆர்வம் காட்டியதால் உயர்வுடன் நிறைவடைந்தது.

மும்பை பங்குச்சந்தையில் இன்றைய வர்த்தகத்தின் நிறைவில் சென்செக்ஸ் 115.39 புள்ளிகள் உயர்ந்து, 76,520.38 புள்ளிகளில் நிலைபெற்றது. வர்த்தகத்தின் இடையே 76,743.54 புள்ளிகள் வரை சென்றது. இதேபோல் தேசிய பங்குச்சந்தை குறியீட்டெண் 50 புள்ளிகள் அதிகரித்து 23,205.35 புள்ளிகளில் நிலைபெற்றது.

சென்செக்ஸ் கணக்கிட உதவும் நிறுவனங்களில் அல்ட்ராடெக் சிமென்ட், மஹிந்திரா & மஹிந்திரா, சன் பார்மாசூட்டிகல், சொமாட்டோ, டெக் மஹிந்திரா, டாடா ஸ்டீல், டாடா மோட்டார்ஸ், டைட்டன், ஐடிசி மற்றும் பஜாஜ் பைனான்ஸ் ஆகியவை அதிக லாபம் ஈட்டின.

கோடக் மஹிந்திரா வங்கி, எச்.சி.எல் டெக்னாலஜிஸ், பவர் கிரிட், ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ், ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா, ஹிந்துஸ்தான் யூனிலீவர், இண்டஸ்இண்ட் வங்கி, நெஸ்லே இந்தியா மற்றும் ஆக்சிஸ் வங்கி ஆகியவற்றின் பங்குகள் பின்தங்கின.

ஆசிய சந்தைகளில், டோக்கியோ மற்றும் ஷாங்காய் சந்தைகளில் உயர்வுடன் வர்த்தகம் நிறைவடைந்தது. ஹாங்காங் மற்றும் சியோல் சந்தைகள் சரிவை சந்தித்தன. ஐரோப்பிய சந்தைகள் ஏற்றத்துடன் நிறைவடைந்தன. நேற்று இரவு வர்த்தகத்தில் அமெரிக்க சந்தைகளும் ஏற்றம் பெற்றன.

உலகளாவிய பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 0.20 சதவீதம் உயர்ந்து ஒரு பீப்பாய்க்கு 79.16 டாலர்களாக இருந்தது.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் நேற்று ரூ.4,026.25 கோடி மதிப்புள்ள பங்குகளை விற்பனை செய்ததாக பரிமாற்ற தரவுகள் தெரிவிக்கின்றன.

Read Entire Article